மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர்கள் வெற்றி பெற்றதை மதிமுகவின் துரை வைகோ பாராட்டினார். பணநாயகத்தை நிராகரித்து ஜனநாயகத்தை முன்னிறுத்திய வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த அவர், முதல்வர் ஜோசப் விஜயின் தலைமையை புகழ்ந்து, வெற்றி தொடர வேண்டும் என வாழ்த்தினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தமிழ்நாடு தேர்தல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேர்தலாக பார்க்கப்படுகிறது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தை மாறிமாறி ஆண்டுவந்த அதிமுக, திமுக ஆகிய இரண்டு பெரிய கட்சிகளையும் மக்கள் புறக்கணித்து புதியதாக வந்த விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தை தேர்வுசெய்தனர்.
இந்த சூழலில் தவெக 107 இடங்களில் வெற்றிபெற்று தொங்கு சட்டசபை உருவான நிலையில், காங்கிரஸ், இடதுசாரிகள், முஸ்லீம் லீக், விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவோடு கடந்த மே 10ஆம் தேதி தவெக தலைவர் ச. ஜோசப் விஜய் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்நிலையில் அதிமுகவை சேர்ந்த பல சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்த நிலையில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்று இன்று வாக்குகள் எண்ணப்பட்டன. 5 மாத தவெக ஆட்சியை மக்கள் எப்படி பார்க்கிறார்கள், ஒருவேளை தோல்வி ஏற்பட்டால் அதன் தாக்கம் எப்படியிருக்கும் என்ற கத்திமுனை தேர்தலாகவே தமிழக வெற்றிக்கழகம் இந்த இடைத்தேர்தலை சந்தித்தது.
இதனால் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்ட தமிழகத்தின் முதல்வர் விஜய் தவெக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்குசேகரித்தார். அதன் பலனாகவே இன்று வாக்கு எண்ணிக்கை முடிவில் மதுராந்தகம், தாராபுரம் இரண்டு தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்கள் மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோர் அமோக வெற்றியை பதிவுசெய்துள்ளனர்.
இந்தநிலையில் தவெக வெற்றியை பாராட்டியிருக்கும் மதிமுகவின் துரை வைகோ, பணநாயகத்தை நிராகரித்து ஜனநாயகத்தை வெற்றிபெற வைத்திருப்பதாக பாராட்டியுள்ளார்.
எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் அவர், “ஊழல் வேண்டாம், வன்மம் வேண்டாம், ஆபாசம் வேண்டாம், அவதூறும் வேண்டாம் என்று பணநாயகத்தை நிராகரித்து, ஜனநாயகத்தை வெற்றி பெற வைத்திருக்கும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கு, மறுமலர்ச்சி திமுக சார்பில் என் கோடான கோடி நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வெற்றிக்கு உழைத்த மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தவெக, மதிமுக, காங்கிரஸ், விசிக மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் நிர்வாகிகள், தோழர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகளையும் நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
வெற்றி பெற்ற இரு தவெக சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
பொதுவாழ்வில் நம் வலிமை கூடும் போதெல்லாம் மக்கள் முன் பணிவும், மக்கள் பணியில் துணிவும் வரவேண்டும் என்பதற்கு நூறு விழுக்காடு உதாரணமாக விளங்கும் மாண்புமிகு முதல்வர் அன்புச் சகோதரர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் கரங்களைப் பற்றி அன்பு பாராட்டுகிறேன்; உங்கள் வெற்றி தொடரட்டும் என்று வாழ்த்தி மகிழ்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.