durai murugan
durai murugan ptb web
தமிழ்நாடு

“வரும் காலத்தில் தலைவராகும் தகுதி...” உண்ணாவிரதப் போராட்டத்தில் துரைமுருகன் பேச்சு!

Angeshwar G

நீட் தேர்வு ரத்திற்கு எதிராக செயல்படும் மத்திய அரசு மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து திமுகவின் பல்வேறு அணிகள் சார்பில் அறிவிக்கப்பட்ட உண்ணாவிரத போராட்டம் இன்று காலை திட்டமிட்டபடி தொடங்கியுள்ளது. மதுரையை தவிர்த்து தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக திமுகவினர் இன்று உண்ணாவிரதம் இருக்கின்றனர். மதுரையில் அதிமுக மாநாடு நடக்க இருப்பதால் அங்கு திமுகவின் உண்ணாவிரதப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வுக்கு எதிரான திமுக உண்ணாவிரதம்

இதில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெறும் ஆர்ப்பாட்டத்தை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தொடங்கி வைத்துள்ளார். சென்னையில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா. சுப்பிரமணியன், சேகர் பாபு ஆகியோர் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள மாவட்ட தலைநகரங்களில் மாவட்ட செயலாளர்கள் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.

இந்நிகழ்வில் பேசிய அமைச்சர் துரைமுருகன், “அமைச்சர் உதயநிதி தலைமை தாங்கி பங்கேற்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு முதன்முறையாக எனக்கு ஏற்பட்டுள்ளது. 53 ஆண்டுகாலம் கலைஞரோடு இருந்த நான் அவரோடு பல்வேறு நிகழ்ச்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளேன். கட்சியின் இன்றைய தலைவர் மு.க.ஸ்டாலின் இளைஞர் அணியின் தலைவராக இருந்த போதும், அதன் பின் முதல்வராக பொறுப்பேற்ற போதும் அவரோடு பல மேடைகளில் கலந்துகொண்டு வாழ்த்தி பேசும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இந்த மாபெரும் இயக்கத்தில் இரண்டு பெரும் தலைவர்களோடும் இருந்த நான், வருங்காலத்தில் தலைவராக இருக்கக்கூடிய தகுதியோடு அமர்ந்துள்ள உதயநிதியோடு சேர்த்து மூன்று பேரையும் பாராட்டி பேசுகிறேன். இவ்வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்கும் வாய்ப்பல்ல.

இந்த அறப்போராட்டம் ஆதிக்கக்காரர்களால் அமல்படுத்தப்பட்ட நீட் தேர்வை எதிர்த்து நீதிக்காக நடத்தப்படும் போராட்டம்” என்றார். அவரது பேட்டியை செய்தியில் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் முழுமையாக காணலாம்.