தமிழ்நாடு

இதை விடக் கேவலம் இருக்க முடியாது: துரைமுருகன்

இதை விடக் கேவலம் இருக்க முடியாது: துரைமுருகன்

webteam

முதலமைச்சரே வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது ஜனநாயகப் படுகொலை. இதை விடக் கேவலம் வேறொன்றும் இருக்க முடியாது என்று திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.

திமுக முதன்மை செயலர் துரைமுருகன், எம்.பி.க்கள் ஆர்.எஸ்.பாரதி, திருச்சி சிவா ஆகியோர் மும்பையில் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன்,

ஒரு மாநிலத்தில் நடைபெறுகிற இடைத்தேர்தலில் ஒரு முதலமைச்சரே தலைமை தாங்கி வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது என்பது மிகப்பெரிய ஜனநாயகப்படுகொலை. இதைவிடக் கேவலம் தமிழகத்திற்கு வேறொன்றும் இருக்க முடியாது. இது தண்டனைக்குரிய குற்றம் என்பதால் இந்த அமைச்சர்கள் மீது உரிய நடவடிக்கைகளை ஆளுநர்தான் எடுக்க வேண்டும். யார் எந்தப்புகாரை கொடுத்தாலும் அமைச்சர்கள் மீது வழக்குத் தொடுக்கிறபோது ஆளுநருடைய பரிந்துரை தேவைப்படுகிறது. எனவே தெரிந்தே தவறிழைக்கின்ற ஆளுங்கட்சி முதல்வரும், அமைச்சர்களும் அதிகார துஷ்பிரயேகத்தை பயன்படுத்தி அதிகாரிகளையும், காவல்துறையினரையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட காரணத்தால் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அது மட்டுமல்ல இது குறித்து விசாரிப்பதற்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும்.

இந்த ஆட்சி மேலும் தொடர்வது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. எனவே இந்த ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். வாக்காளர்களுக்கு லஞ்சம் அளிக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மத்திய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டுமென்றும் நாங்கள் ஆளுநரிடம் மனுக் கொடுத்து விட்டு வந்திருக்கிறோம். 22 நிமிடங்களாக எங்களது கோரிக்கை குறித்து ஆளுநர் விவாதித்தார். தானும் இந்த விவகாரம் குறித்து அறிந்திருக்கிறேன். ஓரிரு நாட்களில் சென்னைக்கு வந்த பிறகு இந்த விவகாரம் குறித்து மற்றவர்களிடமும் ஆலோசித்த பிறகு முடிவெடுக்கிறேன் என ஆளுநர் நம்பிக்கை அளித்திருக்கிறார் என துரைமுருகன் தெரிவித்தார்.