போதைப்பொருள் தொடர்பான தகவலின் அடிப்படையில் பாலாஜி முருகதாஸ் வீட்டில் சோதனை நடந்தது. சோதனை சட்டப்படி நடந்ததாக காவல்துறை விளக்கம் அளித்தது. பாலாஜி, தன்னை HARASS செய்ததாகவும், வீட்டை காலி செய்யுமாறு சொன்னதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
செய்தியாளர் - ராஜ்குமார். ர
தமிழில் பிரபலமான ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராகக் கலந்துகொண்டு பிரபலமானவர் நடிகர் பாலாஜி முருகதாஸ். இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர், பிக்பாஸ் சீசன் 4-ல் இரண்டாவது ரன்னர் அப் ஆகவும் தேர்வானார். தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்து வரும் இவர், தனது சமூக வலைதளப் பக்கங்களிலும் தொடர்ந்து வீடியோக்களைப் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில், சென்னை அடுத்த ஆவடி, திருவேற்காடு பகுதியில் உள்ள பாலாஜி முருகதாஸின் வீட்டில் நேற்றிரவு போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். இது தொடர்பான வீடியோவை சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்ட பாலாஜி முருகதாஸ், தன் மீது யார் புகார் அளித்தது, எதற்காகப் புகார் அளிக்கப்பட்டது என்பது தனக்குத் தெரிய வேண்டும் என்றும், இதுதொடர்பாகப் பலமுறை கேட்டும் புகார் அளித்தவர் குறித்த விவரத்தை காவல்துறையினர் தெரிவிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சோதனைக்கான வாரண்ட் எதுவும் தன்னிடம் காட்டப்படவில்லை, போலீஸ் துறையின் இந்தச் செயலுக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், பாலாஜி முருகதாஸைத் தொடர்புகொண்டு பேசியபோது, காவல்துறையினர் தனது வீட்டில் முறையாகச் சோதனை எதுவும் மேற்கொள்ளவில்லை என்றும், தன்னைத் HARASS செய்துவிட்டுச் சென்றதாகவும் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தற்போது வீட்டைக் காலி செய்யுமாறு தன்னிடம் வீட்டின் உரிமையாளர் கூறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனால், சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர உள்ளதாகவும் பாலாஜி முருகதாஸ் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஆவடி காவல் ஆணையரகம் தரப்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, போதைப்பொருள் தொடர்பான தகவலின் அடிப்படையிலேயே சென்னை திருவேற்காட்டில் உள்ள குடியிருப்பில் சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும். இந்தச் சோதனையில் 4 பேர் மட்டுமே ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோதனையின்போது வீட்டில் இருந்தவர்களிடம் காவல்துறையினர் மரியாதையுடன் நடந்துகொண்டதாகவும், ஒட்டுமொத்த சோதனையும் சட்டப்படியான நடைமுறைகளைப் பின்பற்றியே மேற்கொள்ளப்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.