தமிழ்நாடு

கோடைக்கு முன்பே தொடங்கிய வறட்சி: வன விலங்குகள் தவிப்பு

கோடைக்கு முன்பே தொடங்கிய வறட்சி: வன விலங்குகள் தவிப்பு

webteam

கோடைகாலத்திற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் கோவை வனக்கோட்டத்தில் வனவிலங்குகளுக்கான செயற்கை நீராதாரங்களை உருவாக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். 

கோவை வனக்கோட்டதில், மேட்டுப்பாளையம், சிறுமுகை, பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட மொத்தம் ஏழு வனச்சரகங்கள் உள்ளன. பசுமையான அடர்ந்த வனப்பரப்பைக் கொண்ட இப்பகுதியில் கடந்த மூன்றாண்டுகளாகவே போதிய மழைப்பொழிவு இல்லை என்பதால் இதன் பசுமை குறைந்து வறட்சியான சூழலே நிலவியது. இவ்வாண்டும் தேவையான அளவு பருவ மழை பெய்யாமல் பொய்த்துப்போன காரணத்தினால் இப்பகுதி வனத்தில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. 

மார்ச் மாத இறுதி வாரங்களில் துவங்கும் கோடை வெயிலின் தாக்கம் வழக்கத்திற்கு மாறாக இவ்வாண்டு கடந்த ஜனவரி மாதமே துவங்கியது. பகல் நேரங்களில் கடும் வெப்பம் நிலவுவதால், வன உயிரினங்கள் தாகம் தீர்க்கும் வனக்குட்டைகள், நீரோடைகள் என அனைத்தும் வறண்டு வருகின்றன. மேலும் வனங்களில் உள்ள செடி கொடிகள், மரங்கள் காய்ந்து வருவதால் தாவர உண்ணிகளான யானை, மான், காட்டெருமை போன்ற வனவிலங்குகளுக்கு காடுகளில் தீவனத் தட்டுப்பாடும் ஏற்பட்டு வருகிறது. 

கோடைகாலம் இன்னும் பலமாதங்கள் நீடிக்கும் என்ற நிலையில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் காட்டை விட்டு வெளியேறும் சூழல் அதிகரிக்கும். இதனை கருத்தில் கொண்டு வனவிலங்குகள் தாகம் தீர்க்கும் வகையில் தண்ணீர் தொட்டிகள் கட்டி அதில் தினசரி தண்ணீர் விடுவது, காய்ந்து வரும் வனக்குட்டைகளில் செயற்கையான முறையில் ஆழ்குழாய் கிணற்று நீர் மூலம் தண்ணீர் நிரப்புவது போன்ற பணிகளில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். 

கோடை காலம் முடியும் வரை இப்பணிகள் தொடரும் என்றும் வனத்தின் வறட்சியை சமாளிக்க கூடுதல் வனப்பணியாளர்கள் இதற்கென நியமிக்கப்பட்டுள்ளதாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.