இ-பாஸ் முறையை ரத்து செய்யவும், கொரோனா காலத்தில் சாலை வரி, இன்சூரன்சை ரத்து செய்ய வலியுறுத்தியும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வாடகை ஓட்டுநர்கள் 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இபாஸ் முறை அமலில் இருந்து வருகிறது. ஊரடங்கில் பல தளர்வுகளை அறிவித்தாலும் தனியார் வாடகை வாகனங்களை இயக்க அரசு இதுவரை அனுமதி அளிக்கவில்லை. இ-பாஸ் முறை மற்றும் ஊரடங்கால் தனியார் வாடகை வாகன ஓட்டுநர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. மேலும் இ பாஸ் முறையில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. சட்டவிரோதமாக இபாஸ் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இபாஸ் முறையையால் தொடர்ந்து மன அழுத்தத்துக்கு ஆளாவதாகவும் எப்போது இபாஸ் முறை ரத்து செய்யப்படும் என எதிர்ப்பார்த்து காத்திருப்பதாகவும் பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இ- பாஸ் முறையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும், கொரோனா பொது முடக்கம் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஓட்டுனர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், ஊரடங்கின் போது வானங்கள் இயக்கப்படாத நிலையில் இன்சூரன்ஸ் மற்றும் சேவை வரியை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஓட்டுநர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.