கோடைக் காலத்தின்போது சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுப்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார்.
வடகிழக்குப் பருவமழை இந்த ஆண்டு பொய்த்துவிட்டது. குறிப்பாக சென்னையில் எதிர்பார்த்த அளவிற்கு மழை இல்லை. தற்போதே பல நிலத்தடி நீர் குறைந்துவிட்டது. இதனால் குளிக்கும் தண்ணீருக்கே தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகிவிட்டது. அத்துடன் ஏற்கனவே சென்னை குடிநீர் வாரியம் விநியோகம் செய்த நீரின் அளவும் பாதியாக குறைக்கப்பட்டுவிட்டது. இதைத்தொடர்ந்து வரும் கோடை காலத்தில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் கோடைக்காலத்தில் சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை தடுப்பது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் பங்கேற்றனர். சென்னையைச் சுற்றியுள்ள ஏரிகளில் நீர் இருப்பு குறைவாக உள்ளதால் கோடைக் காலத்தில் தட்டுப்பாட்டைச் சமாளிக்க நடவடிக்கை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. என்ன மாதிரியான மாற்று ஏற்பாடுகள் செய்வது, குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிப்பது எப்படி என்பது குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார்.