மதுபோதையில் அட்டூழியம்
மதுபோதையில் அட்டூழியம் புதியதலைமுறை
தமிழ்நாடு

“ஊத சொன்னா என்ன கடிக்கிற?” போக்குவரத்து போலீஸாரை பாடாய் படுத்திய போதை ஆசாமி!

யுவபுருஷ்

சென்னை வியாசர்பாடி கணேசபுரம் சப்வே அருகே தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் பிரகாஷ் என்பவர், இன்று மதிய நேரத்தில் சாப்பிடுவதற்காக நடந்து சென்றுள்ளார். அப்போது, ஆட்டோவை ஓட்டி வந்த ஓட்டுனர் அவர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். இதனால் பிரகாஷுக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அங்கு வந்த வியாசர்பாடி போக்குவரத்து போலீசார், ஆட்டோ ஓட்டுனரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, ஆட்டோவை ஓட்டி வந்தவர், அதே பகுதியைச் சேர்ந்த ராஜன் என்பதும், அவர் மதுபோதையில் ஆட்டோவை ஓட்டி வந்ததும் தெரியவந்தது.

மது போதையில் இருந்த ஆட்டோ ஓட்டுனரிடம், அவர் மது அருந்தியது உண்மைதானா என்று சோதிக்க கருவி வைத்து சோதனை செய்துள்ளார் போலீஸ் அதிகாரி. ஆனால், மதுபோதையில் இருந்த ராஜனோ, ஊதுவதற்கு பதிலாக, சுமார் 30 நிமிடத்திற்கும் மேலாக பைப்பை உறிஞ்சேபடியும், கடித்தபடியும் போக்கு காட்டியுள்ளார்.

ஒழுங்காக ஊதினால் ஆட்டோ சாவியை கொடுத்துவிடுகிறேன் என்று போலீஸ் அதிகாரி சொல்ல, “என்னால் இவ்வளவுதான் ஊத முடியும்” என்று கூறியுள்ளார் ஆட்டோ ஓட்டுனர். ஒரு கட்டத்தில், போக்குவரத்து போலீஸாரின் கண்ணத்தை பிடித்து “நான் என்ன உங்கள மாதிரியா கட்டிங் பண்ணியிருக்கேன்” என்று கூறினார்.

தொடர்ந்து, சோதனையில் அவர் மது அருந்தியது உண்மைதான் என்று தெரியவர, பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்த போலீஸார் அவரது ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். போக்குவரத்து காவலர்களுடன் சுமார் ஒரு மணி நேரம் மல்லுக்கட்டிய ஆட்டோ ஓட்டுநரின் செயல், அப்பகுதியினரிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது.