திருப்பத்தூர் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் Pt web
தமிழ்நாடு

”திராவிட மாடல் 2.0 ஸ்டார்ட்; நான் ஆணவத்தில் கூறவில்லை” - முதல்வர் ஸ்டாலின்!

”திராவிட மாடல் 2.0 ஸ்டார்ட்” என திருப்பத்தூர் ஜோலார்ப்பேட்டையில் நடைபெற்ற வடக்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Premkumar S

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் மும்முரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. ஆளுங்கட்சியாக உள்ள திமுக தொடர்ச்சியாக இம்முறையும் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் காரணமாகவே திமுக தொடர்ச்சியான மாநாடுகளையும், கட்சி சார்ந்த விழாக்களையும் நடத்தி வருகிறது.

இந்தநிலையில் தான், இன்று திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி பகுதியில் திமுகவின் வடக்கு மண்டல வாக்குச்சாவடி குழு பயிற்சி மாநாடு இன்று மாலை 4 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.

திமுக வடக்கு மண்டல் பூத் கமிட்டி மாநாடு

இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஸ்டலின், ”கருப்பு சிவப்பு துண்டோடு தேர்தல் களத்துக்கு தயாராகும் உங்களை பார்க்கும்போது, திருவிடந்தையை விட திருப்பத்தூரில் உற்சாகம் இருமடங்காகிறது. நடந்து முடிந்த நாடளுமன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றிகளைப் பெற்றோம். ஆனால், அப்போது இருந்ததை விட இப்போது நிறைய திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறது. அந்த வகையில், இந்தத் தேர்தலில் மிகப்பெரியதாக நான் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன். 2019-ல் இருந்து நாம் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் நாம் வென்றுள்ளோம்; அதுவும் சதிகளை முறியடித்த சரித்திர வெற்றியை நாம் பெற்றிருக்கிறோம். இந்தியா முழுக்க எந்த டிரெண்ட் இருந்தாலும், தமிழ்நாட்டில் நிரந்தர டிரெண்ட் கறுப்பு சிவப்பு தான், 2026-லும் திமுக ஆட்சிதான். திராவிட மாடல் 2.0 ஸ்டார்ட்.

இதை, நான் ஆணவத்தில் சொல்லவில்லை. அடக்கத்தோடும், பணிவோடும், நமது அரசு செய்திருக்கும் திட்டங்களின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையில் சொல்கிறேன். உங்களைப் போல நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இருக்கும்போது, நாம் வெற்றித் தவிர வேறு எது குறித்தும் யோசிக்கத்தேவையில்லை, மீண்டும் உதய சூரியன் ஆட்சி உறுதி. 2026-ல் திமுக பெறும் வெற்றியை பல ஆண்டுகளுக்கு அரசியல் ஆய்வாளர்கள் வியந்து பேசக்கூடிய வரலாற்று வெற்றியாக இருக்கவேண்டும். இந்தத் தேர்தலில் 2 கோடியே 50 லட்சம் வாக்குகளுக்கு குறையாமல் நாம் வாங்கியே ஆகவேண்டும். இங்கு வந்திருக்கும் ஒவ்வொருவரும் 40 அல்லது 50 வாக்குகளுக்கு பொறுப்பேற்றுக் கொண்டால் சுலபம்” எனத் தெரிவித்தார்.

திமுக மாநாட்டு திடல்

மக்களை நேரில் சந்திக்க வேண்டும்

”வாட்ஸ் ஆப் போன்ற சமூக ஊடகங்கள் இருந்தாலும், மக்களை நேரில் சந்திப்பது போல வராது. எனவே, நீங்கள் மீண்டும் மீண்டும் மக்களிடம் பணிவாகவும், மரியாதையாகவும் சென்று நாம் செய்ததைக் கூறி வாக்கு கேட்க வேண்டும். 2021-ஐ விட இப்போது திமுகவின் மீது மக்கள் செல்வாக்கு அதிகரித்திருக்கிறது. மக்களிடம் சென்று நமது செயல் திட்டங்களை விளக்கிக் கூறுங்கள். நமக்கு வாக்களிப்பவர்களாக இருந்தாலும், நமக்கு வாக்களிக்காதவர்களாக இருந்தாலும் தேர்தல் நடைபெறும் வரை அவர்களை அணுகுங்கள். அடுத்த 2 மாதத்திற்கு எந்த வீட்டிற்கு சென்றாலும் திமுக பிராண்ட் தான் தெரிய வேண்டும்” என வாக்குச்சாவடி முகவர்களை திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார்.