2ஜி வழக்கில் நெருப்பாற்றில் நீந்தி திமுக வெற்றி பெற்றுள்ளதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
2ஜி அலைக்கற்றை வழக்கில், சிபிஐ தனி நீதிமன்றத்தில் தனி நீதிபதி சைனி அவர்கள் இன்று அளித்துள்ள தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது என்று கி.வீரமணி கூறியுள்ளார். உண்மைகளை உலகுக்கு அறிவிக்கும் - பொய்மையின் திரையை சுக்கு நூறாகக் கிழித்தெறிந்த தீர்ப்பு என்றும், இதை வரவேற்று பாராட்டி மகிழ்வதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த எல்லையில்லாத மகிழ்ச்சிக்கு காரணம், பெரியார் வழியில் பார்த்து, முதலில் இவ்வுண்மைகளை எதிர்நீச்சலாக நாடு முழுவதும் எடுத்துச் சென்று பிரச்சாரம் செய்தது திராவிடர் கழகம்தான் என்றும் வீரமணி கூறியுள்ளார்.
இனிமேலாவது கோயபல்சுகளும், அவர்களைத் தாங்கிப் பிடிக்கும் ஊடகங்களும் பாடம் கற்று, பொய்மைக்கு முடிசூட்டி துரோக ராகத்தை வாசிக்காமல், உண்மைகளை மறுக்கத் துணியாது எழுதட்டும் என்றும், வாய்மை வென்றிருக்கிறது என்றும், நெருப்பாற்றில் நீந்தி வெளிவந்துள்ள முழு விடுதலை பெற்ற நமது சகோதரர் ஆ.ராசா, கனிமொழி, தயாளு அம்மாள், சரத்குமார் முதலிய அனைவருக்கும் வாழ்த்து தெரிவிப்பதாகவும் கி.வீரமணி கூறியுள்ளார்.