தமிழ்நாடு

“மன்னார்குடி ஜீயர் பேச்சு வன்முறையை தூண்டுவதாக உள்ளது‘’ - திராவிடர் கழகம் புகார் மனு

சங்கீதா

'அமைச்சர்கள் நடமாட முடியாது' என வன்முறையை தூண்டும் வகையில் பேசி வரும் மன்னார்குடி ஜீயர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வழியுறுத்தி, தஞ்சாவூர் மேற்கு காவல்நிலையத்தில் தஞ்சாவூர் மாநகர திராவிடர் கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை தருமபுரம் ஆதினம் வரும் 22-ம் தேதி பட்டணப் பிரவேச நிகழ்ச்சி வைத்துள்ளார். அப்போது, அவரை பக்தர்கள் பல்லக்கில் வைத்து சுமந்து செல்வார்கள். இதற்கு தடை விதித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர், ஆதினத்துக்கு கடிதம் அளித்துள்ளார். இதனைக் கண்டித்து பல்வேறு தரப்பினர் எதிர்ப்பும், சிலர் வரவேற்பும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 4-ந் தேதி தஞ்சை அருகே களிமேடு பகுதியில் தேர் விபத்து நடந்த சம்பவ இடத்திற்கு மதுரை ஆதினம், மன்னார்குடி ஜீயர் செண்டலங்கார செண்பக மன்னார் ஸ்ரீ ராமனுஜர் நேரில் சென்று மெளன அஞ்சலி செலுத்தினர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த மன்னார்குடி ஜீயர் செண்டலங்கார செண்பக மன்னார் ஸ்ரீ ராமனுஜர் பேசுகையில் “பட்டணப் பிரவேசம் நடந்தே தீரும். அதை யாராலும் நிறுத்த முடியாது. இந்து விரோத செயல்களில் ஈடுபடுவது, கோயில்களில் தலையீடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால், அரசாங்கத்தில் எந்த ஒரு அமைச்சர்களும் சாலைகளில் நடக்க முடியாது” என தெரிவித்திருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திராவிடர் கழகம் சார்பில், தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் திராவிட கழகத்தின் தஞ்சை மாவட்ட தலைவர் அமர்சிங் பேசும்போது, “மன்னார்குடி ஜீயர் செண்டலங்கார செண்பக மன்னார் ஸ்ரீ ராமனுஜர், தமிழ்நாட்டில் வன்முறை தூண்டும் வகையிலும், மதக்கலரத்தை ஏற்படுத்தும் வகையிலும் பேசியுள்ளார். மேலும் அமைச்சர்களை, சட்டப்பேரவை உறுப்பினர்களை நடமாடவிட மாட்டேன் என சொல்வதும் வன்மையாக கண்டிக்கக்கூடியது. நடைமுறை சட்டத்தில் குற்றமாகும். எனவேதான் மன்னார்குடி ஜீயர் மீது தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளோம்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும், அந்தப் புகாரில் வன்மையை தூண்டியது, மதக்கலவரத்தை தூண்டுவது, அரசை முடக்குவது சட்டபடி குற்றம். அவர்மீது பல்வேறு சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிய வேண்டும் என புகார் அளித்ததாக தெரிவித்தார். இதுபோன்று தமிழகம் முழுவதும் மன்னார்குடி ஜீயர் மீது புகார் கொடுத்து உள்ளதாக அமர்சிங் தெரிவித்தார்.