செய்தியாளர் - சந்தானகுமார் , ராஜ்குமார். ர
அடுத்த 25 ஆண்டுகளில் தமிழக நகரங்கள் அபரிமிதமான வளர்ச்சியை அடையும் வகையில், அதற்கான திட்டங்களைத் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, குடிநீர், சாலை, போக்குவரத்து, கழிவுநீர் மேலாண்மை எனப் பல்வேறு அடிப்படை வசதிகளை மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளது. அதுவும், ஒரே நேரத்தில் 19 மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் இந்தப் பணிகளை மேற்கொள்ளத் திட்டம் தயாராகி வருகிறது. அப்படி என்னென்ன மாற்றங்கள் வரப்போகின்றன? விரிவாகப் பார்க்கலாம்...
தமிழகத்தில் நகர்ப்புற உள்கட்டமைப்பு வசதிகளை அடுத்த 25 ஆண்டுகளுக்குத் தேவையான வகையில் மேம்படுத்தும் நோக்கில், நீண்டகால நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் தயாரிக்கப்பட உள்ளது. இதற்காக ஆலோசனை நிறுவனங்களைத் தேர்வுசெய்ய தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகமான TNUIFSL டெண்டர் கோரியுள்ளது. உலக வங்கியின் நிதியுதவியுடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
முதற்கட்டமாக, தமிழகத்தில் உள்ள 11 மாநகராட்சிகள் மற்றும் 8 சிறப்பு நிலை நகராட்சிகள் என மொத்தம் 19 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஓசூர், கரூர், நாமக்கல், திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி, சிவகாசி ஆகிய 11 மாநகராட்சிகளும், பொள்ளாச்சி, உதகமண்டலம், உடுமலைப்பேட்டை, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருச்செங்கோடு, கோவில்பட்டி, ராஜபாளையம் ஆகிய 8 நகராட்சிகளும் இத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன. இந்த 19 நகரங்களிலும் மொத்தம் 11 முக்கியப் பிரிவுகளின் கீழ் மேம்பாட்டுப் பணிகள் திட்டமிடப்பட உள்ளன. குறிப்பாக, சீரான குடிநீர் விநியோகம், பாதாளச் சாக்கடை, திடக்கழிவு மேலாண்மை, சாலைகள் மற்றும் போக்குவரத்து வசதிகள், பூங்காக்கள், பசுமைப் பகுதிகள், பொழுதுபோக்கு இடங்கள், நீர்நிலைகள் மேம்பாடு, சமூக உள்கட்டமைப்பு, பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு வசதிகள், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான டிஜிட்டல் நகராட்சி நிர்வாகம், பொது சுகாதாரம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது.
இதற்காக ஒவ்வொரு நகரத்திலும் தற்போதைய மக்கள்தொகை, எதிர்கால மக்கள்தொகை வளர்ச்சி, நிலப் பயன்பாடு, பொருளாதார நடவடிக்கைகள், சுற்றுச்சூழல் நிலை மற்றும் நகர விரிவாக்கம் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்படும். மேலும், அடுத்த 5, 10, 15, 20 மற்றும் 25 ஆண்டுகளில் தேவைப்படும் குடிநீர், சாலைகள், கழிவுநீர் மேலாண்மை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் கணக்கிடப்பட உள்ளன.
இந்த ஆய்வின் அடிப்படையில், உடனடியாக மேற்கொள்ள வேண்டிய பணிகள், நடுத்தர கால வளர்ச்சிப் பணிகள், நீண்டகாலத் திட்டங்கள் எனப் பிரித்து முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்துவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்படும். அதுமட்டுமின்றி, நகர்ப்புறங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு, கனமழை உள்ளிட்ட இயற்கைப் பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில், காலநிலை மாற்றத்தைத் தாங்கக்கூடிய உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்கான பரிந்துரைகளும் இடம்பெற உள்ளன. இதன்மூலம், தேர்ந்தெடுக்கப்பட்ட 19 நகரங்களின் தற்போதைய தேவைகளை மட்டும் கருத்தில்கொள்ளாமல், அடுத்த 25 ஆண்டுகளில் ஏற்படக்கூடிய மக்கள்தொகை மற்றும் நகர்ப்புற வளர்ச்சியையும் முன்கூட்டியே கணித்து, அதற்கேற்ப அடிப்படை வசதிகளைப் படிப்படியாக மேம்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.