தமிழ்நாடு

மேடையில் நடிக்கும்போதே திடீர் மாரடைப்பு.. சரிந்து விழுந்து உயிரிழந்த நாடக கலைஞர்!

webteam

சத்தியமங்கலம் அடுத்த ஊக்கரம் ஊராட்சி, குப்பந்துறையில் மேடை நடிக்கும்போது மாரடைப்பால் சரிந்து விழுந்த நாடக கலைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த ஊக்கரம் ஊராட்சி, குப்பந்துறையில் 25-க்கும் மேற்பட்ட தெருகூத்து கலைஞர்கள் உள்ளனர். இவர்கள் திருவிழா காலங்களில் கிராமந்தோறும் சென்று பாரம்பரிய தெருக்கூத்து நடத்தி மக்களை மகிழ்விப்பார்கள். இதில் குப்பந்துறையைச் சேர்ந்த நாடக கலைஞர் ராஜய்யன் தெருக்கூத்து கலைஞர்களை ஒருங்கிணைந்து நடத்துவர்.

நாரதர், நரசிம்மன் வேடத்தில் நடிக்கும் தனிசிறப்பு பெற்ற இவர், தற்போது திருவிழா இல்லாததால் மழை வேண்டி குப்பந்துறையில் 5 நாட்கள் நடைபெறும் இரண்யா தெருக்கூத்தில் நடித்து வந்தார். இந்நிலையில், நேற்றிரவு விடிய விடிய இந்த தெருக்கூத்து நடந்தது. இதில் 25 நாடகக் கலைஞர்கள் நடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ராஜய்யன் ஆடல் பாடல் என மக்களை குஷிபடுத்திக் கொண்டிருந்தார்.

இதையடுத்து உச்சப்பட்ச வேகத்தில் ஆடிக்கொண்டிருந்த அவர், திடீரென ஆட்டத்தை நிறுத்தி அப்படியே மேடையிலேயே சரிந்தார். பார்வையாளர்கள் நாடகம் என நினைந்திருந்த நிலையில், மேடையிலிருந்த நாடக கலைஞர்கள் அவரை மீட்டு சத்தியமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கொனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து அவரது உடலை சொந்த ஊரான குப்பந்துறைக்கு கொண்டுவந்தனர். பொதுமக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். கொரானா பரவல் காரணமாக தெருக்கூத்து கலைஞர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலையில், மாரடைப்பால் நாடக கலைஞர் இறந்ததால் அவரது குடும்பத்துக்கு நிதியுதவி அளிக்க வேண்டும் என தெருக்கூத்து கலைஞர்கள் கோரிக்கை விடுத்தனர்.