தமிழ்நாடு

நெல்லை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடு - சாக்கடை பெருக்கெடுத்து ஓடும் அவலம்

webteam

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் நிலையத்தைச் சுற்றி சாக்கடை கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் கடும் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது.

நெல்லை பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் பகுதியில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு பல்வேறு அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களும் வந்து செல்கின்றனர். இங்கு வந்துசெல்லும் நோயாளிகளின் நலனுக்காக ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனது சொந்த செலவில் மருத்துவமனையின் நுழைவாயில் அருகே இலவசமாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைத்து கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் இந்த குடிநீர் நிலையத்தைச் சுற்றி தற்போது மருத்துவமனையின் சாக்கடை கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் கடும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையின் கழிவறைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் அந்த பகுதியில் கசிந்து ஓடுவதால் துர்நாற்றம் வீசுகிறது. குடிநீர் பிடிப்பதற்காக வந்து செல்லும் நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவமனையின் இந்த அவலத்தை பார்த்து முகம் சுழித்தபடி செல்கின்றனர்.

ஏற்கெனவே கொரோனா போன்ற கொடிய நோய்கள் பரவிவரும் சூழ்நிலையில் நோயை தீர்க்கவேண்டிய மருத்துவமனையிலேயே இதுபோன்ற சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ள சம்பவம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான அப்துல் ஜாபர் அளித்த பேட்டியில், ’’பொதுமக்கள் சிகிச்சைக்கு வந்துசெல்லும் இடம் இது. இங்கு வந்தால் தங்களது நோய் தீர்ந்து விடும் என்ற நம்பிக்கையில் பொதுமக்கள் வருகிறார்கள். ஆனால் இந்த கழிவுநீரால் தங்களுக்கு வேறு ஏதேனும் நோய் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். எனவே மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக அந்த பகுதியில் சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.