கழிவு நீர் அகற்றுவதற்கு மனிதர்களை பயன்படுத்தினால் ஜாமீனில் வெளிவராத முடியாத சிறை தண்டனை கிடைக்கும் என கட்டட உரிமையாளர்களை திருவேற்காடு நகராட்சி ஆணையர் எச்சரித்துள்ளார்.
சென்னை அருகேயுள்ள திருவேற்காடு நகராட்சியில் கழிவு நீர் அகற்றுவது குறித்த விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் செந்தில்குமரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கழிவு நீர் அகற்றும் தனியார் நிறுவனங்கள், கழிவுநீர் லாரி உரிமையாளர்கள், குடியிருப்போர் சங்க நிர்வாகிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
அவர்களுக்கு அறிவுரை வழங்கிய நகராட்சி ஆணையர், கழிவு நீர் தொட்டிகளை மனிதர்களை வைத்து சுத்த செய்யக்கூடாது, இயந்திரங்கள் மூலம் மட்டுமே சுத்தம் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். கழிவு நீர் அகற்றும்போது உயிரிழப்பு ஏற்பட்டால் கட்டடத்தின் உரிமையாளர் மற்றும் கழிவுநீர் அகற்றும் நிறுவன ஒப்பந்ததாரர் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.
கழிவு நீர் தொட்டியில் ஆட்கள் இறங்கி வேலை செய்வது தெரிய வந்தால் அபராதம் மற்றும் ஜாமீனில் வெளிவர முடியாத சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். விதிமுறைகளை பின்பற்றி கழிவு நீர் அகற்றப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.