தமிழ்நாடு

ஏபிவிபி தேசிய செயலாளரை சந்தித்த கீழ்பாக்கம் மருத்துவமனை டாக்டர் சுப்பையா பணியிடை நீக்கம்

கலிலுல்லா

ஏபிவிபி தேசிய செயலாளர் நிதி திருப்பாதியை சிறையில் சந்தித்த கீழ்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர் சுப்பையா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்தை பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த முற்றுகை போராட்டம் தொடர்பான விவகாரத்தில் ஏபிவிபி தேசிய செயலாளர் நிதி திருப்பாதி மற்றும் 33 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். இந்நிலையில், இன்று ஏபிவிபி தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர் டாக்டர் சுப்பையா சண்முகம் சென்னை புழல் சிறையில் நிதி திரிபாதியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

அரசு ஊழியருக்கான ஒழுங்கு நடத்தை விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை புற்றுநோய் துறை தலைவர் மருத்துவர். சுப்பையா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். துறை ரீதியான விசாரணை நடைபெற்று மறு அறிவிப்பு வரும் வரை இந்த உத்தரவு பொருந்தும் என மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.

ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது பக்கத்து வீட்டில் குடியிருக்கும் பெண்ணுடன் ஏற்பட்ட பிரச்சனையில் அவரது வீட்டின் முன்பு சிறுநீர் கழித்த பிரச்சனையில் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.