தமிழ்நாடு

சென்னையில் அடுக்குமாடி பேருந்து நிலையம் - மக்கள் வரவேற்பு

webteam

தமிழகத்தில் முதன்முறையாக அடுக்குமாடி பேருந்துநிலையம் சென்னையை அடுத்த மாதவரத்தில் திறக்கப்பட்டுள்ளது. 

மாதவரத்தில் அடுக்குமாடி புறநகர் பேருந்துநிலையத்தை தலைமைச்செயலகத்தில் இருந்து காணொலிகாட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். 8 ஏக்கர் பரப்பளவில், 95 கோடி ரூபாய் மதிப்பில் இந்த அடுக்குமாடி பேருந்துநிலையம் கட்டப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் கீழ்தளம், மேல் தளத்தில் 100க்கும் அதிகமான வாகனங்களை நிறுத்தி வைக்கும் வகையில் இந்தப் பேருந்து நிலையம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், 70 கார்கள், ஆயிரத்து 500 இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதியும் செய்யப்பட்டுள்ளது. 

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், அவசர கால மருத்துவ உதவி உள்ளிட்ட வசதிகளும் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளதால், மாதவரம் அடுக்குமாடி பேருந்துநிலையம் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. முதற்கட்டமாக மாதவரத்தில் இருந்து ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களுக்கு 42‌ பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதன்பின் படிப்படியாக‌ திருப்பதி, காளஹஸ்தி, திருவள்ளூர் செல்லும் விரைவு பேருந்துகள் மாதவரத்திலிருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.