தமிழ்நாடு

`இபிஎஸ் - ஓபிஎஸ் போல வாழாதீங்க; சுயமரியாதையோட இருங்க’- மணமக்களை வாழ்த்திய அமைச்சர் உதயநிதி

webteam

“கலைஞரும் தமிழும் போல; ஸ்டாலினும் உழைப்பும் போல வாழ வேண்டுமென்று எல்லோரும் என்று எல்லோரும் மணமக்களை வாழ்த்துவார்கள். நான் இங்கே, எப்படி வாழக் கூடாது என்று மணமக்களுக்கு அறிவுரை தெரிவிக்க உள்ளேன்” எனக்கூறி அமைச்சர் உதயநிதி வித்தியாசமாக மணமக்களை வாழ்த்தியுள்ளார்.

சென்னை பெருநகர மாநகராட்சி மண்டலம் 6, வார்டு 78-ல் அமைந்துள்ள அறிஞர் அண்ணா மாளிகை திறப்பு விழா மற்றும் 9 இணைகளுக்கு கட்டணம் இல்லா திருமணத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வைத்தார்.

இதைத் தொடர்ந்து மணமக்களுக்கு சீர்வரிசை பொருட்களையும் வழங்கி வாழ்த்திப் பேசிய அவர், “முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரவிச்சந்திரன் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்தும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்களின் மேம்பாட்டு நிதியிலிருந்தும் மற்றும் மாநகராட்சி நிதியில் இருந்தும் ஆறு கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அண்ணா திருமண மண்டபத்தை மிகச் சிறப்பாக கட்டி முடித்துள்ளார்கள். தனியார் திருமண மண்டபத்திற்கு நிகராக இந்த கட்டிடத்தை ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் கட்டி முடித்துள்ளார்கள்.

ரவிச்சந்திரன் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது எதிர்க் கட்சியாக இருந்தாலும் பல்வேறு திட்டங்களை எழும்பூர் தொகுதிக்கு கொண்டு வந்துள்ளார். குறிப்பாக விளையாட்டுத் துறையில், நேவல் ஆபிஸர் சாலையில் சிந்தடிக் புட்பால் மைதானம், பல்வேறு இடங்களில் உடற்பயிற்சி கூடங்கள் என பல்வேறு திட்டங்களை செய்துள்ளார்.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினருக்கு இணையாக இந்நாள் சட்டமன்ற உறுப்பினரும் சிறப்பாக தொகுதியில் பணியாற்றி வருகிறார். வீடுகளை இழந்த பல்வேறு குடும்பங்களுக்கு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் வீடுகளை வழங்கியுள்ளார். கலைஞரும் தமிழும் போல, தலைவரும் (முதல்வர் ஸ்டாலின்) உழைப்பு போல என்று பொதுவாக மணமக்களை பலரும் வாழ்த்துவார்கள். ஆனால் நான் எப்படி வாழக் கூடாது என்று மணமக்களுக்கு அறிவுரை தெரிவிக்க உள்ளேன். அது என்னவெனில், இபிஎஸ் - ஓபிஎஸ் போல வாழாதீர்கள். சுயமரியாதையை விட்டுக் கொடுக்காமல் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும்” என்று வாழ்த்தி அறிவுரை வழங்கினார்.

இந்நிகழ்வில் இந்து சமய அறநிலைத் துறை அமைச்சர் சேகர்பாபு, மாநகர மேயர் பிரியா ராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் பரந்தாமன், வெற்றியழகன், ஜோசப் சாமுவேல், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கேஎஸ்.ரவிச்சந்திரன், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.