P. Shanmugam web
தமிழ்நாடு

"அதிமுக எம்எல்ஏ-க்களை தவெகவில் சேர்க்க கூடாது" - பெ.சண்முகம்

பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் இந்த ஆட்சியில் மட்டுமல்ல, அனைத்து ஆட்சிக் காலங்களிலும் தொடர்ந்து நடைபெற்று வந்திருக்கின்றன.

PT WEB

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய ஒன்றிய அலுவலக திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் கலந்து கொண்டு புதிய ஒன்றிய அலுவலகத்தை திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலுக்கு முன்பாக 10 லட்சம் கோடி ரூபாய் கடன் இருப்பதாக கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், தற்போது சுமார் 13 லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ள நிலையில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளையும் நலத்திட்டங்களையும் எவ்வாறு நிறைவேற்றப் போகிறார்கள் என்பது குறித்து கேள்வி எழுப்பினார். அரசிற்கான வருவாயை திரட்டுவதற்கான முயற்சிகளில் புதிய அரசு ஈடுபட வேண்டும். கடந்த காலங்களில் கனிம வளங்கள் தனியாருக்கு வழங்கப்பட்டதால் அதன் லாபம் தனியாருக்கே சென்றது.

மணல், கிரானைட் உள்ளிட்ட கனிம வளங்களை தமிழக அரசே நேரடியாக வெட்டி எடுத்து விற்பனை செய்தால் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் வருவாய் ஈட்ட முடியும். மக்கள் மீது கூடுதல் சுமை ஏற்றாமல் அரசின் வருவாயை பெருக்கும் வழிகளை அரசு ஆராய வேண்டும் என்றார்.

P. Shanmugam

தொடர்ந்து, ஆளுநர் உரையிலும் இதுபோன்ற கருத்துகள் இடம்பெற்றுள்ளதாகவும், கடந்த ஆட்சிக் காலங்களில் பல்வேறு வழிகளில் வெளியேறிய வருவாய்களை அரசின் கருவூலத்திற்கு கொண்டு வருவோம் என கூறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். நிதிநிலை அறிக்கையில் இதுகுறித்த தெளிவான தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து, பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் இந்த ஆட்சியில் மட்டுமல்ல, அனைத்து ஆட்சிக் காலங்களிலும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

காவல்துறை அத்துமீறல்கள், லாக்கப் மரணங்கள், சாதிய வன்கொடுமைகள் உள்ளிட்ட சமூக பிரச்சினைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்றார்.

குறிப்பாக பாலியல் குற்றங்களில் ஈடுபடும் பல குற்றவாளிகளின் பின்னணியில் போதை பழக்கம் இருப்பது தெரிய வருகிறது. பல்வேறு குற்றங்களுக்கு போதைப்பொருள் பயன்பாடே அடிப்படை காரணமாக உள்ளது. எனவே போதை கலாச்சாரத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்றார்.

முதல்வர் விஜய் ஆளுநர் உரையில் அறிவித்துள்ள ‘போதையில்லா தமிழ்நாடு’ இலக்கை முழுமையாக நிறைவேற்றினால் தற்போது நடைபெற்று வரும் பல்வேறு குற்றங்களை பெருமளவில் குறைக்க முடியும் என்றும் கூறினார். சமூகத்திலும் விழிப்புணர்வு தேவை என்றும், ஆண் குழந்தைகளை பெண்களை மதிக்கும் வகையில் வளர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்து தமிழக வெற்றிக்கழகத்தில் இணைவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், வாக்களித்த மக்களை மதிக்காமல் தேர்தல் நடைபெற்ற சில நாட்களிலேயே சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்றும், இது ஆரோக்கியமற்ற அரசியல் என்றும் தெரிவித்தார்.

ராஜினாமா செய்தவர்களை தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைத்துக் கொள்ளக் கூடாது என்பதையும் தாங்கள் வலியுறுத்தியதாக கூறினார். இதனை தமிழக வெற்றிக்கழக தலைமையிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து அத்தகைய நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார். தமிழகம் முழுவதும் அடிக்கடி இடைத்தேர்தல் நடைபெறும் சூழல் உருவாகக் கூடாது; இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய செயல் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அதிமுக மற்றும் திமுக இணைந்து ஆட்சி அமைப்பது கட்சி பொதுச்செயலாளர் பேபி பேசியதை நீங்கள் மறுத்தீர்கள் என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு “நான் எப்போதும் அதை மறுக்கவே இல்லை” என்று பதிலளித்தார்.