தமிழ்நாடு வருவதற்காக அடுத்த முறை பிரதமர் மோடி விமானம் கேட்டால் தயவு செய்து கொடுக்காதீர்கள் என ஏர் இந்தியாவை தாழ்மையுடன் ஒருவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
காஞ்சிபுரம் ராணுவ தளவாட கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று காலை 6.40 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டார். சுமார் 9.30 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தார். அவரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர் கொடுத்து வரவேற்றனர்.
இதனிடையே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக பல்வேறு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நேரத்தில் பிரதமர் மோடி சென்னை வருவதால் அதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. பிரதமர் மோடியின் சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல தரப்பினரும் இன்று கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். கருப்புச் சட்டை அணிந்தும், வீடு வாசலில் கருப்பு கொடி நாட்டியும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். ட்விட்டரில் #GoBackModi என்கிற ஹேஷ்டேக்கும் உலக அளவில் ட்ரெண்டானது.
இந்நிலையில் தமிழ்நாடு வருவதற்காக அடுத்த முறை பிரதமர் மோடி விமானம் கேட்டால் தயவு செய்து கொடுக்காதீர்கள் என ஏர் இந்தியாவை தாழ்மையுடன் ஒருவர் கேட்டுக்கொண்டுள்ளார். ‘ரஜினி பேக்ட்ஸ்’ என்ற பெயரில் ட்விட்டரில் செயல்பட்டு வரும் ஒருவர், ஏர் இந்தியாவிடம், “ உங்களிடம் ஒரு தாழ்மையான வேண்டுகோள். அதனை பொறுமையாக கேட்க முடியுமா? ” என கேட்டிருக்கிறார். அதற்கு பதிலளித்த ஏர் இந்தியா நிர்வாகம் “ தங்களுக்கு நாங்கள் எந்த வகையில் உதவி செய்ய வேண்டும். தெரிந்துகொள்ளலாமா..? எனக் கேட்டிருக்கிறது. இதற்கு பதிலளித்த அவரோ, “ தமிழ்நாடு வருவதற்காக அடுத்த முறை பிரதமர் மோடி விமானம் கேட்டால் தயவு செய்து கொடுக்காதீங்க” என தெரிவித்திருக்கிறார்.
‘இங்கிலீஷ்காரன்’ படத்தில் நடிகர் சத்தியராஜின் திருமணத்தை தடுத்து நிறுத்துவற்காக நடிகர் வடிவேலு பலவிதமான திட்டங்களை வகுப்பார். அதற்கென சில உதவியாளர்களையும் வைத்திருப்பார். அதில் வடிவேலுக்கு ஆலோசனை தெரிவிக்கும் ஒருவர், “ திருமணத்தை நிறுத்துவற்கு எனக்கு ஒரு அருமையான ஐடியா இருக்கிறது. சீப்பை ஒளித்து வைத்தால் மாப்பிள்ளையால் எப்படி தலைவார முடியும்..? பின்னர் எப்படி கல்யாணம் நடக்கும். கல்யாணத்தை நிறுத்திடலாம்” என ஆலோசனை கொடுப்பார். அதற்கு நக்கலாக பதிலளிக்கும் வடிவேலோ “ மூக்கு பொடப்பா இருந்தா இப்படித்தான் யோசிக்கத் தோணும்” என பதிலளிப்பார். அதனைப்போல ஏர் இந்தியா விமானம் கொடுக்கவில்லையென்றால் பிரதமர் மோடியால் சென்னை வரமுடியாது என்பது போல் அந்த நபர் வேண்டுகோள் விடுத்துள்ளார். எதிர்ப்புகள், போராட்டங்களால் ஒருவேளை பிரதமர் சென்னை வராமல் இருக்கலாம். ஆனால் இப்படியெல்லாம் ஏர் இந்தியாவிற்கு ஐடியா கொடுத்து பிரதமர் மோடியின் வருகை ரத்து செய்யலாம் என நினைத்தால் அது கொஞ்சம் ஓவர்தான்..!