தமிழ்நாடு

“திருட்டு பயத்தால் அத்தி வரதரை பூமிக்கடியில் வைத்தோம்” - ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்

webteam

அத்தி வரதரை காண திருப்பதியை விட அதிகக் கூட்டம் வருவதால் மீண்டும் குளத்திற்குள் வைக்கக்கூடாது என ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலின் குளத்தில் இருந்து 40 வருடங்களுக்குப் பின்னர் அத்தி வரதர் வெளியே எடுக்கப்பட்டுள்ளார். இதையடுத்து 48 நாட்கள் அத்தி வரதரை தரிசிக்கலாம் என கோயில் நிர்வாகம் அறிவித்ததால், லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்து வருகின்றனர். இந்திய குடியரசுத் தலைவர் உட்பட ஏராளமான பிரபலங்களும் அத்தி வரதரை தரிசித்துவிட்டு சென்றுள்ளனர்.

இதனால் நாளுக்கு நாள் அங்கு கூட்டம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. எதிர்பார்த்ததைவிட மக்கள் அதிகமாக அத்தி வரதரை தரிசிக்க வருவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டுள்ளன. இன்று முதல் பக்தர்களுக்கு பிஸ்கட் மற்றும் சர்க்கரை கரைசலும் வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் மக்களின் கூட்டத்தால் இதுநாள் இருந்த வரதராஜ பெருமாள் கோயிலின் வருவாய் பல மடங்கு உயர்ந்துள்ளது.

இந்நிலையில் 40 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியே எடுக்கப்பட்டுள்ள அத்தி வரதரை மீண்டும் குளத்திற்குள் வைக்கக்கூடாது என ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் தெரிவித்துள்ளார். அத்தி வரதரை லட்சக்கணக்கோர் காண வருவதாகவும், திருப்பதியை விட புகழ் வாய்ந்த இடமாக அத்தி வரதர் வைபவம் உள்ளதாகவும், அதனால் தான் மக்கள் அதிகமாக வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், “கடந்த காலங்களில் திருட்டு பயம் காரணமாக அத்திவரதரை பூமிக்கடியில் புதைத்தோம், தற்போது அது தேவையில்லை. இதுதொடர்பாக முதல்வரை சந்தித்து அனைத்து மடாதிபதிகளும் கோரிக்கை விடுக்கவுள்ளோம்” என அவர் தெரிவித்துள்ளார்.