தங்களை வளர்த்தவரை, அரிவாளால் வெட்டிக்கொலை செய்ய வந்தவர்களிடமிருந்து நாய்கள் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, அயனாவரம் கேகே நகர் 5வது தெருவில் வசிக்கும் காய்கறி வியாபாரி கார்த்தி. நேற்றிரவு வீட்டுக்கு வெளியே உட்கார்ந்திருந்த இவரை, இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் திடீரென அரிவாளால் வெட்ட முயன்றனர். இதில் கையிலும், தோள்பட்டையிலும் காயம் ஏற்பட்டு அலறினார் கார்த்தி. அப்போது அவரது வளர்ப்பு நாய்கள், களத்தில் இறங்கி வெட்டவந்தவர்களை விரட்டியது. நாய்களின் விசுவாசத்தால் கார்த்தி உயிர்பிழைத்தார்.
காயமடைந்த கார்த்தி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கார்த்தியை வெட்டியபின் சூர்யா என்பவர் தப்பியோட, கத்திகளுடன் ஐசிஎப் ரயில்வே குடியிருப்புப்பகுதியில் இருசக்கரவாகனத்தில் சுற்றிய சஞ்சீவ் குமாரை, தலைமைச்செயலக காலனி காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி மடக்கிப்பிடித்தார். அவரிடம் நடத்திய விசாரணையில், கார்த்தியை கொலை செய்ய முயன்ற சஞ்சீவ் குமார் பற்றி தெரியவந்தது. 2010ஆம் ஆண்டு வன்னிய சம்பத் என்ற வழக்கறிஞர் 8 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அப்போது 13 வயது சிறுவனாக இருந்த சஞ்சீவ் குமார், தனது கண் முன்னே தந்தை வெட்டிக்கொல்லப்பட்டதற்கு பழிவாங்கவே கார்த்தியை கொலை செய்ய முயன்றது தெரியவந்தது.
கார்த்தியை நாய்கள் காப்பாற்றிவிட்டதால், மேலும் ஒருவரை கொல்ல ஐசிஎப் ரயில்வே குடியிருப்பில் சுற்றியபோதுதான் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியிடம் சிக்கியுள்ளார் சஞ்சீவ் குமார். கொலை முயற்சியில் தொடர்புடைய சூர்யாவை காவல்துறையினர் தேடிவருகிறார்கள். இதற்கிடையே குற்றவாளியை மடக்கிப்பிடித்த காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் நேரில் அழைத்து சான்றிதழ் அளித்து பாராட்டினார்.