தமிழ்நாடு

சிறுமியை நாய் கடித்த சம்பவத்தில் நாயின் உரிமையாளர் ஜாமீனில் விடுவிப்பு

சிறுமியை நாய் கடித்த சம்பவத்தில் நாயின் உரிமையாளர் ஜாமீனில் விடுவிப்பு

நிவேதா ஜெகராஜா
சென்னையை சேர்ந்த அடுக்குமாடி குடியிருப்பொன்றில், சிறுமியை நாய் கடித்த சம்பவம் தொடர்பாக உரிமையாளர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்திருந்தனர். இந்நிலையில் அவர் தற்போது ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். 
சென்னை நொளம்பூர் பகுதியில், DABC மிதலம் என்ற தனியார் அடுக்குமாடி குடியிருப்பொன்று உள்ளது. இங்கு வசித்து வருபவர் விஜயலட்சுமி. இவர் ஜெர்மன் ஷெப்பர்ட் ரக நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். கடந்த 28-ம்தேதி இந்த நாய் அதே குடியிருப்பில் வசித்து வரும் 9 வயது சிறுமி ஒருவரை துரத்தி சென்று கடித்துள்ளது. சிறுமியின் கை, கால், முதுகு என மொத்தம் 16 இடத்தில் சிறுமியை நாய் கடித்துள்ளது. இதையடுத்து அச்சிறுமியை அவரின் பெற்றோர் அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். மேலும் சிறுமியின் தந்தை நொளம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதைத்தொடர்ந்து போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையின்போது "நாயை அடுக்குமாடி குடியிருப்பில் வளர்க்க கூடாது" காவல்துறையினர் கூறியதையடுத்து விஜயலட்சுமி நாயை கொண்டு சென்று விட்டார். இந்நிலையில் சிறுமியை நாய் கடித்தது தொடர்பாக நாயின் உரிமையாளர் விஜயலட்சுமி மீது நொளம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 289- விலங்குகளை கவனக்குறைவாக பார்த்து கொள்ளுதல், 337- காயம் ஏற்படுத்துதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து நேற்று நாயின் உரிமையாளர் விஜயலட்சுமியை நொளம்பூர் போலீசார் கைது செய்தனர். பிறகு மாஜிஸ்திரேட் வீட்டில் ஆஜர்படுத்தினர். காவல் நிலைய ஜாமினில் விடுவிக்க அறிவுறுத்தியதால் கைதான விஜயலட்சுமி காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.