தமிழ்நாடு

நாய்க்கறி விவகாரம்.. ராஜஸ்தான் விரைகிறது தனிப்படை..!

நாய்க்கறி விவகாரம்.. ராஜஸ்தான் விரைகிறது தனிப்படை..!

Rasus

ஜோத்பூரில் இருந்து சென்னை வந்த ரயிலில் நாய்க்கறி பறிமுதல் செய்யப்‌பட்ட விவகாரத்தில் தவறான பெயரில் பார்சல் அனுப்பியதாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜோத்பூரில் இருந்து மன்னார்குடி செல்லும் விரைவு ரயில், கடந்த 17-ஆம் தேதி சென்னை எழும்பூர் நிலையத்தை வந்தடைந்தது. அந்த ரயிலில் அழுகிய இறைச்சி கொண்டுவரப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்புத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், மாநகராட்சி அதிகாரிகளுடன் சென்ற உணவு பாதுகாப்புத்துறையினர், பார்சல்கள் வைக்கப்படும் இடத்தில் சோதனை மேற்கொண்டனர். 

அதில் 5-க்கும் மேற்பட்ட பெட்டிகளில் 2000 கிலோ இறைச்சி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அது நாய்க்கறியாக இருக்கலாம் என சந்தேகித்த அதிகாரிகள், அவற்றில் சில துண்டுகளை பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அது நாய்க்கறியா..? அல்லது ஆட்டு இறைச்சியாக என்பது விரைவில் தெரியவரும். நாய்க்கறி வந்ததாக சந்தேகிக்கப்படும் பார்சல், கறி விற்பனை செய்துவரும் அப்துல் ரஷித், முகமதி ரபி உள்ளிட்ட நால்வரின் பெயரில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக விளக்கமளித்த கறி விற்பனையாளர்கள், தாங்கள் ஆட்டுக்கறியை வாங்கவே ஆர்டர் கொடுத்த நிலையில், அந்த பார்சலில் சந்தேகத்திற்குரிய கறி இருப்பதாகவும் தெரிவித்தனர். தங்களிடம் ஆட்டுக்கறிக்கு ஆர்டர் அளித்ததற்கான ஆவணங்கள் இருப்பதாக கூறும் கறி உரிமையாளர்கள், இதற்கு பின்னால் யாரோ சதி செய்திருப்பதாக குற்றம்சாட்டினர்.

இந்நிலையில் ரயிலில் நாய்க்கறி பறிமுதல் செய்யப்‌பட்ட விவகாரத்தில் தவறான பெயரில் பார்சல் அனுப்பியதாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளியை பிடிக்க தனிப்‌படை ரயில்வே காவல்துறையினர் ஜோத்பூர் செல்ல இரு‌ப்பதாக சென்னை கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை முதன்மை ஆணையர் லூயிஸ் அமுதன் தெரிவித்துள்ளார்.