HOSPITAL PT
தமிழ்நாடு

துரத்தித் துரத்தி கடித்த நாய்! ஒரே நாளில் 12 பேருக்கு நேர்ந்த பயங்கரம்! தென்காசியில் அதிர்ச்சி!

வெளியே வேலைக்குச் சென்றவர்கள், சாலையில் நடந்து சென்றவர்கள் என சிறுவர் முதல் பெரியவர்கள் வரை பலரை தெருநாய் அடுத்தடுத்து கடித்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

இந்தியா முழுவதும் தெருநாய்கள் விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், தென்காசி கடையநல்லூரில் வெறிநாய் தாக்குதல் ஒரே நாளில் 12 பேரை படுகாயமடையச் செய்தது. சாலையில் நடந்து சென்றவர்கள், விவசாயிகள், திருமண நிகழ்வுகளுக்குச் சென்றவர்கள் என பலர் பாதிக்கப்பட்ட நிலையில், அபாயகரமாக சுற்றித்திரியும் நாய்களை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியா முழுவதும் சமீபகாலமாக தெருநாய்கள் தொடர்பான விவகாரம் பெரும் விவாதப் பொருளாக மாறி வருகிறது. ஒருபுறம், தெருநாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும், பொது இடங்களில் அவற்றுக்கு உணவு அளிப்பதைத் தடுக்க வேண்டும் என சிலர் வலியுறுத்தி வருகின்றனர். மறுபுறம், “ நாங்கள் ஏன் பொது இடங்களில் உணவளிக்கக் கூடாது? அதுவும் ஒரு உயிர்தான். பசியால்தான் அது பலரையும் கடிக்கிறது” என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

The Greater Chennai Corporation (GCC) has issued instructions for pet dog owners

இந்நிலையில், தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சிப் பகுதிகளான மேலக் கடையநல்லூர், கிருஷ்ணாபுரம் மற்றும் ரஹ்மானியாபுரம் ஆகிய இடங்களில் சாலையில் நடந்து சென்றவர்கள், விவசாய வேலைக்குச் சென்றவர்கள் மற்றும் திருமண நிகழ்வுகளில் பங்கேற்கச் சென்றவர்களை வெறிநாய் ஒன்று கொடூரமாகத் துரத்தித் துரத்திக் கடித்ததில், ஒரே நாளில் 12-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகக் கூறப்படுகிறது.

13 வயது சிறுமி முதல் 65 வயது முதியவர் வரை 12 பேரை அந்த வெறிநாய் ஒரே நாளில் கடித்ததாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்தவர்கள் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். லேசான காயமடைந்த 5 பேர் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், தீவிர காயமடைந்த பிரகதீஷ் என்பவர் மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 30-க்கும் மேற்பட்டோர் தெருநாய் கடியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

HOSPITAL

தெருக்களில் அபாயகரமான முறையில் சுற்றித்திரியும் நாய்களைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், அப்பகுதியில் அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரிந்த வெறிநாயை நகராட்சி ஊழியர்கள் பிடித்து அப்புறப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.ஒரே பகுதியைச் சேர்ந்த 12-க்கும் மேற்பட்டோரை அடுத்தடுத்து வெறிநாய் கடித்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.