Ops - ஓ பன்னீர்செல்வம்
Ops - ஓ பன்னீர்செல்வம் புதிய தலைமுறை
தமிழ்நாடு

#EXCLUSIVE | பிரதமருடனான சந்திப்பு ஏன்? பாஜக-வுடன் இணைந்து பயணிக்க திட்டமிடும் ஓபிஎஸ்?

PT WEB

செய்தியாளர் - விக்னேஷ் முத்து

ஒளிப்பதிவாளர் - நரேஷ்

____________

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்ற நிலையில், மறுபுறம், தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வமும் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது, ‘எடப்பாடி பழனிசாமி தனது பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்யும்வரை எனது தர்மயுத்தம் தொடரும்’ என்று ஓபிஎஸ் தெரிவித்தார்.

நேற்றைய தினம் ஒருநாள் பயணமாக திருச்சி வந்த பிரதமர் நரேந்திர மோடியை, விமானநிலையத்தில், முன்னாள் முதலமைச்சர் ஓபன்னீர்செல்வம் நேரில் வரவேற்றார். இது மரியாதை நிமித்தமான சந்திப்புதான் என்று கூறியிருந்தார் ஓபிஎஸ்.

ஓபிஎஸ் - மோடி சந்திப்பு

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகிய சூழலில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் இணைந்து பயணிக்க ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் இன்று ஓபிஎஸ்-யிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளிக்கும்போதுதான் தனது தர்மயுத்தம் தொடரும் என்று ஓபிஎஸ் தெரிவித்தார்.

சென்னை திருவான்மியூரில் சென்னை மாவட்ட நிர்வாகிகளுடன் ஓ. பன்னீர்செல்வம் இன்று ஆலோசனை நடத்தினார். இதில், சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம், ஜே.சி.டி. பிரபாகரன், புகழேந்தி, கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆயத்தம், கூட்டணி உள்ளிட்டவை குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது.

பின்னர் பேசிய ஓ. பன்னீர்செல்வம், “எடப்பாடி பழனிசாமி பதவி விலகும்வரை தர்மயுத்தம் போராட்டம் தொடரும். பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைமை உடன் பேசி வருகிறோம். நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகதான் வெற்றி பெறும். 3-வது முறையாக மோடி பிரதமராக வருவார்” என்று தெரிவித்தார். திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தனது ஆதரவாளர்கள் உடன் ஓ. பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் கூட்டணி குறித்து ஆலோசிக்க டெல்லி சென்று பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பிரதமரை சந்திக்க ஓ. பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.