பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வருகையை ஒட்டி, ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்பட்டதாக வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
அந்த வீடியோவில், ஆம்புலன்ஸ் ஒன்று பாலத்தின் ஒரு முனையில் காத்திருக்க, பாலத்தின் வழியாக வாகனங்கள் சில நொடிகள் செல்கின்றன. அந்த வாகனங்கள் முழுவதுமாக சென்ற பின்னர் ஆம்புலன்ஸ் பாலத்தினுள் செல்கிறது.
அன்று நடந்தது என்ன?
தமிழகத்தில் காவிரி பாயும் பகுதியில் கரையோரம் வாழும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு தமிழ்நாடு அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், பள்ளக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கல்லணையில் இருந்து கும்பகோணம், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதியில் வெள்ளப்பெருக்கு உள்ள பகுதிகளில் சில தினங்களுக்கு முன்பு ஆய்வு செய்தார். அவருடன் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளும் தங்களது வாகனங்களில் ஆய்வு மேற்கொண்டனர். அந்த வகையில் கொள்ளிடம் ஆற்றின் அணைக்கரைப் பகுதியில் செல்லும் போதுதான் அந்த பாலத்தின் வழியாக அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் அதிகாரிகளின் வாகனங்கள் சென்றன.
அது ஒரு வழிப்பாதை:
அணைக்கரை பாலமானது ஒரு வழிப்பாதையில் அமைந்தது. ஒரு வாகனம் உள்ளே நுழைந்துவிட்டால் மற்றொரு வாகனம் எதிரில் செல்ல முடியாது. அமைச்சர் மற்றும் அதிகாரின் வாகனங்கள் முன்பே நுழைந்துவிட்டதால் எதிரில் வந்த ஆம்புலன்ஸ் வாகனம் காத்திருக்க நேரிட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், இந்த வீடியோவை பதிவிட்டு சிலர் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
- காதர் ஹூசைன்