நாங்குநேரி
நாங்குநேரி Pt Web
தமிழ்நாடு

நாங்குநேரி: பாதிக்கப்பட்ட மாணவனுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய ஏற்பாடு!

webteam

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியில் பள்ளி மாணவன் ஒருவரை சக மாணவர்கள் வீடு புகுந்து வெட்டியதில் 17 வயது மாணவனும் அவரது 13 வயது தங்கையும் பலத்த காயம் அடைந்து அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். சாதி ரீதியாலான இந்த தாக்குதல் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், ஒருநபர் ஆணையம் அமைத்து வழக்கை விசாரிக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

நாங்குநேரி அரிவாள் வெட்டு சம்பவம்

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவனை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வெட்டுப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் மாணவனுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து சிறப்பு மருத்துவர்கள் அழைத்து வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய ஏற்பாடு!

இந்நிலையில் வெட்டுப்பட்ட மாணவன், அவரது தங்கை பாளையங்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அங்கு சென்றிருக்கும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனை நரம்பியல் சிகிச்சை துறை தலைவர் மகேஷ் தலைமையிலான மருத்துவர்கள் குழு மாணவனை பரிசோதனை செய்து வருகின்றனர். மாணவனுக்கு போடப்பட்ட மாவுகட்டுகள் அகற்றப்பட்டு பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.