இந்திய மருத்துவக் கல்லூரியில், தேசிய மருத்துவ ஆணையத்தை கொண்டுவரும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுரையில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
இந்திய மருத்துவக் கல்வியில் தேசிய மருத்துவ ஆணையத்தை மத்திய அரசு கொண்டு வந்து அதன்மூலம் வரைவு தேசியக் கொள்கை மற்றும் நெக்ஸ்ட் தேர்வை அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் அரசு மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் மருத்துவர்கள் மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை சாலையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிராகவும், இந்திய மருத்துவ ஆணையத்திற்கு எதிராகவும் கைகளில் பல்வேறு பதாகைகளை ஏந்தியவாறு ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் கலந்து கொண்ட மருத்துவர் அழக வெங்கடேசன் பேசிய போது, “மத்திய அரசின் இந்த முடிவால் மாணவர்களில் கல்வி மற்றும் பயிற்சி வகுப்புகள் பாதிக்கப்பட்டு எப்பொழுதும் அவர்கள் தேர்வை மட்டுமே சிந்திக்கும் நிலைமை உருவாகும். மேலும் தேசிய மருத்துவ ஆணையத்தில் மருத்துவர்களை நியமனம் செய்யாமல், அரசு பிரதிநிதிகளை நியமனம் செய்து இந்திய மருத்துவத்தை மத்திய அரசு கையகப்படுத்த முயல்கின்றது, இதனால் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதுடன், சிறந்த மருத்துவர்கள் உருவாவதும் தடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.