அசுத்த ரத்தத்தால் 15 கர்ப்பிணிகள் உயிரிழந்ததாக கூறப்பட்ட விவகாரத்தில் ஆய்வுக்குழு தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
அசுத்த ரத்தம் காரணமாக தமிழகத்தில் 4 மாதங்களில் மட்டும் 15 கர்ப்பிணி பெண்கள் உயிரிழந்தனர் என்ற அதிர்ச்சி தகவல் கடந்த மாதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த உயிரிழப்புகள் அனைத்தும் தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய 3 அரசு மருத்துவமனைகளில் நிகழ்ந்ததாகவும் கூறப்பட்டது. ரத்தம் பாதுகாக்கப்பட்ட அறையில் நிலவிய வெப்பநிலை மாற்றத்தால் ரத்தம் மாசுபாடு அடைந்ததாகவும் அதனை சோதனை செய்த மருத்துவர்கள் பாதுகாப்பான ரத்தம் என்று சான்றிதழ் அளித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் ரத்த வங்கி அதிகாரிகள் மூன்று பேர் மீது குற்ற நடவடிக்கை மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாநில சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஸ் உத்தரவிட்டார். மேலும், 10க்கும் மேற்பட்ட செவிலியர்கள் மற்றும் லேப் டெக்னீசியன்கள் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்ய மருத்துவ கல்வி இயக்குநரகம் 3 பேர் கொண்ட சிறப்பு குழுவை அமைத்தது.
ஒருமாத காலமாக ஆய்வு செய்த அந்தக்குழு அறிக்கையை நேற்று முன் தினம் சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையில் அசுத்த ரத்தத்தால் தான் கர்ப்பிணிகள் உயிரிழந்தார்கள் என்பதற்கு ஆதாரம் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள மருத்துவ கல்வி இயக்குநர் எட்வின் ஜோ, ''கர்ப்பிணிகளுக்கு அசுத்த ரத்தம் கொடுக்கப்பட்டதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. அசுத்த ரத்தம் என ஆய்வில் எங்கும் நிரூபணம் ஆகவில்லை. ரத்தவங்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நாங்கள் மருத்துவ அறிக்கைகளையும் கவனத்தில் கொள்கிறோம். மருத்துவக்குழு அலட்சியமாக இருக்குமேயானால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.