தமிழ்நாடு

கொரோனா தடுப்பூசியை போடுவதில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும்: டாக்டர் ரவீந்திரநாத்

கொரோனா தடுப்பூசியை போடுவதில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும்: டாக்டர் ரவீந்திரநாத்

JustinDurai

கொரோனா தடுப்பூசியை போடுவதில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்றும் யாருக்கு எந்த தடுப்பூசி போடப்படுகிறது என்பதை தெரியப்படுத்த வேண்டும் எனவும் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கூறியுள்ளது.

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத், செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:  

''இந்தியாவில் கோவிட் தடுப்பூசிகளை போடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது வரவேற்புக்குரியது.பாராட்டுக்குரியது. அனைவருக்கும் இத்தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருப்பதும் வரவேற்புக்குரியது. எனினும் ஒரு குறிப்பிட்ட கால வரம்புக்குள் தடுப்பூசிகளை அனைவருக்கும் போட வேண்டும். அப்பொழுதுதான் சமூக எதிர்ப்பு சக்தியை தடுப்பூசிகள் மூலம் பெற முடியும். முழுமையான பயனை பெற முடியும். இந்த கால வரம்பு குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட வேண்டும்.

தடுப்பூசிகள் கொரோனா தடுப்பில் மகத்தான பங்காற்றும் என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. ஆனால் தடுப்பூசி வழங்குவதில் கூடுதல் கவனம் வேண்டும். இந்தியாவில் பயன்படுத்தப்பட உள்ள கோவிட் தடுப்பூசிகளின் திறன், பாதுகாப்பு குறித்த ஆய்வுகளின் ( Clinical Trials) முடிவுகளை முழுமையாக வெளிப்படையாக வெளியிட வேண்டும். அது பல நாட்டு மருத்துவர்கள் மற்றும் உலக சுகாதார நிறுவனத்தின் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும். கோவிட் தடுப்பூசிகள் குறித்த முழுமையான விவரங்களை வெளியிடாமல், அவற்றை பயன் பாட்டிற்கு கொண்டுவருவது அவ நம்பிக்கைகளையே உருவாக்கும்.

கோவேக்சின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனைகள் முடியாத நிலையிலும், அதன் முதல் கட்ட இரண்டாம் கட்ட ஆய்வு முடிவுகள் வெளிப்படையாக வெளியிடப்படாத நிலையிலும், அதன் திறன் குறித்த எந்த விதமான குறைந்த பட்ச விவரங்கள் கூட வெளியிடப்படாத நிலையிலும் அதை பயன்பாட்டுக்கு கொண்டுவருவது சரியல்ல. சோதனைகள் முழுமை பெற்று, முடிவுகளை வெளிப்படையாக அறிவித்த பிறகே அதை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.

பயனாளிகளுக்கு எந்த நிறுவனத்தின் தடுப்பூசி வழங்கப்படுகிறது என்ற விவரத்தை வெளியிட வேண்டும். ஒரு நபருக்கு முதல் டோஸாக எந்த வகை தடுப்பூசி வழங்கப்பட்டதோ, அதே தடுப்பூசியையே இரண்டாம் டோஸாகவும் வழங்கிட வேண்டும். மாற்றி வழங்கிடக் கூடாது.

முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகளில் தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என அரசு அறிவித்துள்ள போதிலும் பயனாளிகளுக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும். ஏனெனில் இப்பொழுது,கோவேக்சின் மூன்றாம் கட்ட பரிசோதனைகள் நடைபெறும் பொழுதே, மருத்துவப் பணியாளர்களுக்கு அத்தடுப்பூசியை வழங்குவதும் மூன்றாம் கட்ட பரிசோதனை போன்றதுதான்.

எனவே, covaxin phase 3 பரிசோதனைகளுக்கு உள்ளாகும் தன்னார்வலர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் வழங்கப்படும் நிவாரணம் போன்று தற்பொழுது தடுப்பூசியை போட்டுக் கொள்வோர் பாதிக்கப்பட்டாலும் நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.

தடுப்பூசிகளை பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் உருவாக்கவும், உற்பத்தி செய்யவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுப்பூசிகள் மற்றும் மருந்துகள் உற்பத்தி செய்யும் பொதுத்துறை நிறுவனங்களை மூடுவதை மத்திய அரசு கைவிட வேண்டும். மருத்துவ மற்றும் மருந்து ஆராய்ச்சிகளுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும்.

இந்தியா முழுவதும் ஏராளமான வைரஸ் ஆராய்ச்சி மையங்களை உருவாக்க வேண்டும். தடுப்பூசிகள் குறித்து தவறான, அறிவியலுக்குப் புறம்பான கருத்துக்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும்’’ என்று கூறினார்.