தமிழ்நாடு

ஜெயலலிதாவுக்கு உடல் உறுப்புமாற்றும் திட்டம் ஏதும் இல்லை !

ஜெயலலிதாவுக்கு உடல் உறுப்புமாற்றும் திட்டம் ஏதும் இல்லை !

webteam

ஜெயலலிதாவுக்கு இதயம், நுரையீரலை மாற்றும் திட்டம் குறித்து எதுவும் விவாதிக்கப்படவில்லை என்று நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்போலோ மருத்துவர் மதன்குமார் வாக்குமூலம் அளித்துள்ளார்.

உடல்நலக்குறைவு காரணமாக, தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2016 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி இரவு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உயிரிழந்தார். ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தரப்பினர் தெரிவித்து வந்தனர். இதனையடுத்து ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது.

அதன்படி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. போயஸ் இல்லத்தின் வேலையாட்கள் முதல் அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள், கட்சியினர் என ஜெயலலிதா தொடர்புடைய அனைத்து தரப்பிடமும் விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. இந்நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தும் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில், மதன்குமார் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். மதன்குமார் அப்பல்லோ மருத்துவமனையின் இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார்.

வாக்குமூலத்தில் எக்மோ கருவி பொருத்திய பின்பும் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால் டிசம்பர் 5ஆம் தேதி இரவில் எக்மோ கருவி அகற்றப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதாக தெரிவித்தார். அப்போது ஜெயலலிதாவுக்கு இதயம் மற்றும் நுரையீரல் மாற்றும் திட்டம் இருந்ததா என ஆணையம் சார்பில் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், அவை குறித்து விவாதிக்கப்படவில்லை என்று மருத்துவர் மதன்குமார் பதில் அளித்ததாக ஆணைய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.