தமிழ்நாடு

5 ஆயிரம் பேருக்கு இலவச சிகிச்சை அளித்த மருத்துவர் ஜெயராஜ்

5 ஆயிரம் பேருக்கு இலவச சிகிச்சை அளித்த மருத்துவர் ஜெயராஜ்

webteam

என்.எல்.சி தொழிற்சாலையில் மருத்துவ இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்ற மருத்துவர் ஜெயராஜ் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு இலவச சிகிச்சை அளித்து வருகிறார். 

என்.எல்.சி. நிறுவனத்தில் மருத்துவ இயக்குனராக பணி்புரிந்து ஒய்வு பெற்ற பிறகு கடந்த 10 ஆண்டுகளாக சென்னை திருவான்மியூரில் மக்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார் மருத்துவர் ஜெயராஜ். இவர்  காலை 6 மணிக்கே சிகிச்சையளிக்கத் தொடங்கி விடுகிறார். சாதாரண மக்களிடம் இவர் கட்டணம் வாங்குவதில்லை. பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், வேலைக்கு செல்வோர் காய்ச்சல் போன்றவற்றால் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே காலையிலேயே சிகிச்சை அளிப்பதாகக் கூறுகிறார். சிகிச்சை மட்டுமின்றி, இலவச மருந்துகள், வேறு மருத்துவமனைக்கு பரிந்துரைப்பது என ஓய்வு பெற்ற பிறகும் சேவையில் ஈடுபட்டுள்ளார்.

மருத்துவம் மட்டுமில்லாமல் நோயாளிகளிடம் நலம் விசாரிப்பது, அவர்கள் குடும்ப பின்னணியை தெரிந்து கொள்வது என பலருக்கும் இவர் குடும்ப மருத்துவர் போல் ஆகிவிட்டார். மருந்து, சிகிச்சை என்கிற அளவில் நின்றுவிடாமல் பரிவுடன் நோயாளிகளை அணுகுவது, மீண்டும் நோய்வாய்ப்படாமல் இருக்க மனரீதியில் ஊக்கம் அளிப்பது மருத்துவர் ஜெயராஜின் சிறப்பு என மக்கள் பாராட்டுகின்றனர்.

2005 ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் சிறந்த மருத்துவருக்கான விருதையும் பெற்றுள்ளார் ஜெயராஜ். இதுவரை 5 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு இலவச சிகிச்சை அளித்துள்ளார். இலவச சிகிச்சை என்பதற்காக மருத்துவர் ஜெயராஜை பார்க்க வரவில்லை என்றும், அவரது அணுகுமுறையும், சிகிச்சை அளிக்கும் முறையுமே அவரிடம் வரக் காரணம் என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.