செய்தியாளர்: ஜெ.அன்பரசன்
சென்னை அடையாறு பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வரக்கூடியவர் ஷாம்.பிரசாத். இவர், டிஜிபி அலுவலகம் மற்றும் மருத்துவக் கவுன்சிலுக்கு புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில் கடந்த பிப்ரவரி மாதம் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தன்னிடம் சிகிச்சைக்கு வந்த போது, அப்பெண்ணின் உடலில் காயங்கள் இருந்ததால், கணவனால் தாக்கப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து இது தொடர்பாக மருத்துவ சான்றிதழ் வழங்கியதாக தெரிவித்துள்ளார்.
இந்த சான்றிதழை அடிப்படையாக வைத்து கடந்த மே மாதம் பாதிக்கப்பட்ட பெண் தி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில், கடந்த 3-ம் தேதி காவல் ஆய்வாளர் கௌசல்யா என்பவர் தன்னை தொடர்பு கொண்டு, தன்னிடம் பேச வேண்டும் என அடையாறு கடற்கரை அருகே வரவழைத்து தன்னை மிரட்டி அந்த பெண்ணுக்கு தவறான மருத்துவ சான்றிதழை வழங்கி இருப்பதாகவும், வழக்கில் சேர்க்கக் கூடாது என்றால் தாங்கள் கொண்டு வந்த ஆவணத்தில் கையெழுத்திட வேண்டும் என குறிப்பிட்டு தன்னிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வழக்கில் தன்னை சேர்க்கக் கூடாது என்றால், பணம் கேட்டு காவல் ஆய்வாளர் மிரட்டியதாக மருத்துவர் தெரிவித்துள்ளார். கோடம்பாக்கத்தைச் சேர்ந்த பெண் 30 லட்சம் வரதட்சணை கேட்டு தனது கணவர் தாக்கியதாக கொடுத்த புகாரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், காவல் ஆய்வாளர் மீது கொடுத்த புகார் தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது.