தமிழ்நாடு

இனியும் நேரத்தை வீணடிக்க வேண்டாம்: ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

இனியும் நேரத்தை வீணடிக்க வேண்டாம்: ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

webteam

தமிழக ஆளுநர் இனியும் நேரத்தை வீணடிக்காமல் தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம் அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், தமிழகத்தில் ஒரு நிலையான ஆட்சி இல்லாத காரணத்தால் தமிழக மக்கள் பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்று கூறினார்.

நீட் தேர்வில் மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் கொடுமை தொடர்கிறது. தமிழகம் வறட்சியால் பாதிக்கப்பட்டு குடிநீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது.இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் யார் முதலமைச்சராக அமர்வது என பதவி வெறி பிடித்த நிலையில் போட்டி நடக்கிறது. காபந்து முதலமைச்சராக இருக்கிற ஒ.பன்னீர் செல்வம் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து தான்தான் முதலமைச்சராக இருகக வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி வருகிறார். கூவாத்தூருக்கும் கிரீன்வேஸ் சாலைக்கும் இடையே பதவிச் சண்டை நடக்கிறது என ஸ்டாலின் கூறினார்.

ஆளுநர் இனியும் நேரத்தை வீணடிக்காமல் தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைய உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும், உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 11 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.அதிமுகவில் இரு அணிகள் இருந்தாலும் இரண்டு அணியுமே தங்களைப் பொருத்தவரையில் அதிமுகதான் எனவும் ஸ்டாலின் கூறினார்.