கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓகி புயலால் ஏற்பட்ட பாதிப்புக்குறித்து ஆய்வு மேற்கொள்ள வந்த மத்தியக் குழுவிடம் அந்தப் பகுதி மக்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
குமரி மாவட்டத்தை தாக்கிய ஓகி புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் ஏராளம். புயலின் போது கடலுக்கு சென்ற மீனவர்கள் சிலர் இன்று வரை கரை திரும்பவில்லை. அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், குமரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் ஓகி புயலால் ஏற்பட்ட பாதிப்புக்குறித்து ஆய்வு மேற்கொள்ள மத்திய குழு இன்று தமிழகம் வந்தது. அப்போது ஆய்வு மேற்கொண்ட மத்தியக்குழுவுடன் மீனவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நீரோடி முதல் இரயுமன் துறை வரையிலான 8 மீனவக் கிராமங்கள் ஓகி புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டன. இது குறித்து பார்வையிட்ட 5 பேர் கொண்ட மத்தியக்குழ கன்னியாகுமரி வந்துள்ளது. தூத்தூரிலுள்ள கல்லூரி ஒன்றில் மீனவப் பிரதிநிதிகளை மத்தியக்குழுவினர் சந்தித்து பேசினர். அப்போது, பாதிக்கப்பட்ட அனைத்து மீனவக் கிராமங்களையும் மத்தியக்குழு பார்வையிட வேண்டும், அனைத்து மீனவர்களின் குறைகளையும் கேட்டறிய வேண்டும் என வலியுறுத்தி மீனவமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கன்னியாகுமரியை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்காததை கண்டித்தும் மீனவப் பெண்கள் முழக்கங்களை எழுப்பினர். அவர்களை சமாதானப்படுத்திய அதிகாரிகள், அங்கிருந்து புறப்பட்டு வள்ளவிளை கிராமத்திற்குச் சென்றனர். .