தமிழ்நாடு

சாலையோரம் வனவிலங்குகளுக்கு உணவளிக்க வேண்டாம்: வன அலுவலர் வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ

kaleelrahman

வன சாலையோரம் சுற்றித்திரியும் வனவிலங்குகளுக்கு உணவளித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என வனச்சரக அலுவலர் விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளார்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமை, குரங்கு உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கின்றன. இதில் யானை, குரங்கு உள்ளிட்ட வனவிலங்குகள் வனப்பகுதி வழியாக செல்லும் சாலையோரங்களில் பகல் நேரங்களில் சுற்றித் திரிகின்றன.

இந்நிலையில் தமிழகம் - கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் திம்பம் மலைப்பாதை மற்றும் ஆசனூர் வனப்பகுதியில் உள்ள சாலையோரம் நடமாடும் குரங்குகளுக்கு பிஸ்கட், பழங்கள், முறுக்கு உள்ளிட்ட தின்பண்டங்களை உணவாக கொடுக்கின்றனர்.

இதேபோல் சாலையோரம் சுற்றித்திரியும் காட்டு யானைகளுக்கு அவ்வழியே செல்லும் கரும்பு லாரி ஓட்டுநர்கள் கரும்புத் துண்டுகளை வீசிச் செல்கின்றனர். தின்பண்டங்களை சுவைத்துப் பழகிய குரங்குகள் வனப்பகுதிக்குள் செல்லாமல் சாலையோரம் முகாமிட்டு வாகன ஓட்டிகள் ஏதாவது உணவு தருவார்களா என எதிர்பார்த்து காத்துக் கிடக்கின்றன.

இதுபோன்ற சமயங்களில் குரங்குகள் சாலையில் செல்லும் வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கும் சம்பவங்களும் நடைபெறுகிறது. இதேபோல் கரும்பு தின்று பழகிய காட்டு யானைகள் வனப் பகுதிக்குள் செல்லாமல் சாலையில் கரும்பு ஏற்றி வரும் லாரிகள் வருகிறதா என எதிர்பார்த்து சாலையில் நடமாடுவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

இதனால் வனவிலங்குகளுக்கு உணவளிக்கக் கூடாது என வனத்துறை சார்பில் பல்வேறு இடங்களில் எச்சரிக்கை பலகைகள் வைத்தும் பயனில்லை. இந்நிலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள தாளவாடி வனச்சரகத்தில் வனச்சரக அலுவலராக பணிபுரியும் சதீஷ் என்ற வனச்சரக அலுவலர், குரங்கு, யானை உள்ளிட்ட வன விலங்குகளுக்கு உணவு அளிப்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அறிவுறுத்தி விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.