தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஒரு சில மாதங்களே உள்ளது. இந்நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப்பங்கீடு, தேர்தலில் போட்டியிட விருப்ப மனு பெறுவது உள்ளிட்ட தேர்தல் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, தமிழக அரசியலில் புதிய கட்சியாக உதயமாகியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் விருப்ப மனு விநியோகம் நேற்று தொடங்கியது. பிப்ரவரி 6 ஆம் தேதி முதல் பிப்ரவரி 14 ஆம் தேதி வரை, சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமையகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்திருந்த நிலையில், நேற்று ஏரளமான தவெக தொண்டர்கள் தவெக தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதிகளில் குவிந்தனர்.
இந்த நிலையில், தவெக தொண்டர்களால் தங்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. வீட்டின் முன் வாகனங்களை நிறுத்துகின்றனர். தடுப்புகளை அமைக்கின்றனர். அமைதி வேண்டி தான் செலவு செய்து ஈசிஆர் பகுதிகளில் வசிக்கிறோம். ஆனால், இங்கும் தங்களால் இயல்பாக இருக்க முடியவில்லை என தவெக அலுவலகம் அருகே அமைந்துள்ள குடியிருப்புவாசிகள் புகார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் தான், விருப்ப மனுக்களைப் பெற யாரும் பனையூரில் உள்ள தவெக தலைமையகத்துக்கு வரவேண்டாம் என தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப்பதிவில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட விரும்பும் கழகத் தோழர்கள், இன்று முதல் கழகத் தலைமை நிலையச் செயலகத்தில் விருப்ப மனுக்களைப் பெற்று, பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது..
இந்நிலையில், கழகத் தலைமை நிலையச் செயலகம் இருக்கும் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் எவ்வித இட நெருக்கடியும் ஏற்படக் கூடாது என்பதை முழுமையாகக் கவனத்தில் கொண்டுள்ளோம். எனவே, மக்கள் மீது அதிக அக்கறை கொண்ட நம் வெற்றித் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, விருப்ப மனுக்களைப் பெறுவதற்காகக் கழகத் தோழர்கள் யாரும் தலைமை நிலையச் செயலகத்திற்கு வர வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம். விருப்ப மனுக்களை இணைய தளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
தொடர்ந்து, அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை முழுமையாகப் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களை இணைக்க வேண்டும். இவற்றை ஏற்கெனவே குறிப்பிட்ட தேதியான பிப்ரவரி 14ஆம் தேதிக்குள் நேரிலோ, கொரியர் / தபால் மூலமோ அனுப்பலாம் என்று கழகத் தலைவர் அவர்களின் உத்தரவின்படி கேட்டுகொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.