விடுதலைப் புலிகள் குறித்த தகவல்களை சிங்கள அரசுக்கு சீமான் வழங்கினார். இளைஞர்களை, தமிழ் சமூகத்தை ஏமாற்றியவர் சீமான் என ராஜீவ்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
திமுக மாணவரணித் தலைவர் ராஜீவ் காந்தி கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கடந்த ஒரு மாதமாக சீமானின் பேச்சு, தமிழீழம் குறித்த அவரது நிலைப்பாடு, தமிழீழம் குறித்து அவர் வெளியிட்டுள்ள தரவுகள் எல்லாம் அம்பலப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொழி என்பது எப்படி பிரதான அரசியலோ, அதுபோல் ஈழம் என்பதும் தமிழகத்தில் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த காலங்களில் தமிழீழத்திற்கு திராவிட இயக்கத் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், கலைத்துறையினர் என பல்வேறு தரப்பினர் ஈழத்திற்கு சென்று வந்திருந்தாலும் அவர்களுக்குப்பின் அந்த மண் முற்றிலுமாக துடைக்கப்பட்டு அழித்தொழிக்கப்படவில்லை. தமிழீழத்திற்கு சீமான் சென்று வந்தபின், ஒட்டுமொத்தமாக தமிழீழம் அழிக்கப்பட்டுள்ளது.
ஆறேழு மாதங்களாக தமிழீழத்தில் இயக்குநர் எனும் போர்வையில் இருந்த சீமான், தமிழீழ விடுதலைப் புலிகளின் பதுங்கு இடங்கள், போர் தளவாடங்களை உளவு பார்த்து சிங்கள அரசுக்கும் பன்னாட்டு அரசுக்கும் கொடுத்ததால், அதன் விளைவாக தமிழீழம் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது என்கிற குற்றச்சாட்டை வைக்கிறோம். இப்போது வரும் ஆதாரங்கள் எல்லாம் அச்சத்தையும் மன இறுக்கத்தையும் உருவாக்குகிறது. சீமான் ஆதாரமாக காட்டிய புகைப்படம் என்னால்தான் எடிட் செய்யப்பட்டது என ராஜ்குமார் சொன்னார்.
இயக்குநர் சந்தோஷும் பிரபாகரனை சீமான் 10 நிமிடம் கூட சந்திக்கவில்லை, அந்த புகைப்படங்கள் இதுவரை வெளிவரவில்லை என்று சொல்லியுள்ளார். இது இரண்டும் அச்சத்தை மட்டுமல்ல, லட்சக்கணக்கான இளைஞர்களை பொய் பித்தலாட்டம், அவதூறில் சீமான் எங்களது வாழ்க்கையை கெடுத்துள்ளார் என்று தோன்றுகிறது.
தமிழீழ ஆதரவையும், தமிழீழத்தையும் அழிப்பதற்கும் சீமான் எனும் மனிதர் இந்த சமூகத்தில் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவருவது யாரை நம்புவது என்ற சிக்கலை இளைஞர்களுக்கு கொடுத்துள்ளது” எனத் தெரிவித்தார்.