நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த திமுக எம்பி கனிமொழி பேட்டியளித்தார்.
அப்போது அவர் பேசும்போது, "குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதியில் நெசவுத்தொழில் ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு, போன்ற பல்வேறு பிரச்னை காரணமாக நலிவடைந்துள்ளது. கொரோனா காலத்திற்கு பிறகு நெசவு தொழிலை மேம்படுத்த தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சாயநீர் பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்காத நிலையில் அமைச்சர் தங்கமணி தனது உறவினருக்கு புதிதாக சாய சலவை அமைப்பதற்கு அனுமதி வழங்கி உள்ளார். சாயசலவை கழிவுநீர் நேரடியாக ஆற்றில் கலந்து சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு வருவதற்கு தீர்வு ஏற்படவில்லை.
உலக சந்தையில் பெட்ரோல் டீசல் விலை குறைந்து வரும் நிலையில் மத்திய அரசு உயர்த்தி கொண்டே போகிறது. இதனால் சுற்றுலா, லாரி தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழக நீட் தேர்வு குறித்து நீதிமன்றத்தில் கண்துடைப்பாக மட்டுமே வழக்காடியது அதிமுக. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வதற்காக தளபதி ஸ்டாலின் முழு மூச்சாக செயல்படுவார்.
எந்த நேரத்தில் தேர்தல் அறிவிப்பு வந்தாலும் திமுக தயார். தேர்தலை சந்திக்க 6 மாதத்திற்கு முன்பிருந்தே திமுக தயாராக உள்ளது. உதய் மின் திட்டத்தில் கையொப்பம்மிட்ட தமிழக அரசு விவசாயம், நெசவாளர்களுக்கு வழங்கிய இலவச மின்சாரத்தை கேள்விக்குறியாக மாற்றியது அதிமுக தான்.
ஜெயலலிதா உதய் மின் திட்டத்தை எதிர்த்து வந்த நிலையில், எடப்பாடி அரசு உதய் மின் திட்டத்தை ஆதரித்து விட்டு தற்போது இலவச மின்சாரம் கொடுப்போம் என்பதை மக்கள் நம்பமாட்டார்கள் திமுகவின் எதிரி எப்போதும் அதிமுக மட்டும் தான் என்று கூறினார்.