vijay, rahul ANI
தமிழ்நாடு

பிரதமர் வேட்பாளருக்குப் போட்டியா? ராகுலைச் சந்திக்காத முதல்வர் விஜய்.. உடைகிறதா கூட்டணி?

அக்டோபர் 11ஆம் தேதி சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடியின் அரசு விழாவில் முதல்வர் விஜய் நேரில் கலந்துகொள்ள உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Prakash J

சென்னை வரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, முதல்வர் விஜயை சந்திக்க வாய்ப்பு இல்லை எனத் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த நிலையில்தான் இருவரின் சந்திப்பும் உறுதியாகாதபட்சத்தில், திமுக எம்பி தயாநிதி மாறன் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாணவர்களைச் சந்தித்து அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் மற்றும் அவர்களுடன் உரையாடும் ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். கல்வி முறையில் உள்ள குறைபாடுகள், தேர்வு முறைகேடுகள், வேலைவாய்ப்பின்மை மற்றும் மாணவர்களின் உரிமைகள் குறித்து நேரடியாக உரையாடி அவர்களின் கருத்துகளைக் கேட்டறிகிறார். அந்தவகையில் கோட்டா, டேராடூன், பிரயாக்ராஜ், புனே மற்றும் இந்தூர் ஆகிய 5 நகரங்களில் இதுபோன்ற நிகழ்வுகளில் ராகுல் காந்தி பங்கேற்றுள்ள நிலையில், நாளை சென்னைக்கு வர உள்ளார். சென்னைத் தீவுத்திடலில் நடைபெற உள்ள மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார்.

rahul gandhi

இதற்கிடையே, ராகுல் காந்தி முதல்வர் விஜயை சந்தித்துப் பேசவிருப்பதாகத் தகவல் பரவியது. ஆனால், தற்போது சென்னை வரும் ராகுல் காந்தி, முதல்வர் விஜய்யை சந்திக்க வாய்ப்பு இல்லை எனத் தகவல் வெளியாகியிருக்கிறது. ராகுல் காந்தியின் இந்த சென்னைப் பயணத்தின்போது, தமிழக முதல்வர் விஜயை அவர் நேரில் சந்திக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் முறைப்படி நேரம் கேட்டிருந்தனர். அவர்களின் சந்திப்பால், கூட்டணி மேலும் வலுப்பெறும் என காங்கிரஸ் நிர்வாகிகள் ஆர்வமாக எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால், அதற்கான சந்திப்பு எதுவும் நடைபெற வாய்ப்பில்லை என தற்போது தெரியவந்துள்ளது. அதேநேரத்தில், அக்டோபர் 11ஆம் தேதி சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடியின் அரசு விழாவில் முதல்வர் விஜய் நேரில் கலந்துகொள்ள உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்திற்கும் காங்கிரஸுக்கும் இடையேயான உறவில் விரிசல் தொடங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் தவெக தலைமையிலான அரசில் காங்கிரஸ் அங்கம் வகித்தாலும், தேசிய அளவிலான கூட்டணி விஷயங்களில் விஜய் சற்று தள்ளியே நின்று வருகிறார். மேலும், பிரதமர் வேட்பாளர் விஷயத்தில் இருதரப்பும் மாறிமாறி கருத்துகளைத் தெரிவித்து வருவது கூட்டணியில் பிளவை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் இருவரின் சந்திப்பும் உறுதியாகாதபட்சத்தில், திமுக எம்பி தயாநிதி மாறன் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.

Vijay, Rahul

அவருடைய பதவில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை மறைமுகமாகக் குறிப்பிட்டு, "சென்னையில் இரண்டு பிரதமர் வேட்பாளர்களும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்வார்களா" என்று அரசியல் ரீதியாக விமர்சித்து கேள்வி எழுப்பியுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் ஒரு விவாதப் பொருளாக மாறியுள்ளது. முன்னதாக, 2026 சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ், தவெக ஆட்சி அமைவதற்காக அக்கூட்டணியிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.