தொண்டர்கள் யாரும் ஆர்வ மிகுதியால் காலில் விழ வேண்டாம் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொண்டர்கள் காலில் விழுவதை ஒருபோதும் தான் விரும்பியதில்லை எனவும், சிலர் ஆர்வ மிகுதியால் காலில் விழுந்து வணங்க முயற்சிப்பது தன்னை மனதளவில் பெரும் நெருக்கடிக்கு ஆளாக்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
சுயமரியாதை வழியில் தன்மானம் காக்கும் இயக்கத்தில் வந்த திமுக-விற்கு, காலில் விழும் செயல் உடன்பாடில்லாத விஷயம் எனவும் குறிப்பிட்டுள்ளார். எப்போதும், அன்பின் அடையாளம் போதும் அடிமை நிலை வேண்டாம் என கூறியுள்ள மு.க.ஸ்டாலின், வளைந்து குனிந்து தரையில் கால்நோக்கி கும்பிடு போடுபவர்களால் தமிழகம் பாழ்பட்டுக் கிடக்கிறது எனவும் தெரிவித்துள்ளார். திமுக-வினருக்கு பள்ளமான பாதை வேண்டாம் எனவும் தலை நிமிர்ந்து வாழ்வதோடு தமிழகத்தையும் தலை நிமிர்த்துவோம் எனவும் கூறியுள்ளார்.