இந்திய - சீன எல்லைப் பிரச்னைகளுக்கு மத்திய அரசுக்குத் துணையாக நிற்போம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
லடாக் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் பலியாகினர். இந்த விவகாரம் தொடர்பாக இந்தியா-சீனா இடையே பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் சீன விவகாரம் தொடர்பாக ஆலோசிக்கப் பிரதமர் மோடி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி, பிரதமர் தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் " நாட்டின் பக்கமும், நாட்டு மக்கள் மற்றும் அரசாங்கத்தின் பக்கமும்தான் எப்போதும் நின்றிருக்கிறோம். பண்டித ஜவஹர்லால் நேருவாக இருந்தாலும்; இந்திரா காந்தியாக இருந்தாலும்; அடல் பிகாரி வாஜ்பாயாக இருந்தாலும், இந்நாட்டுப் பிரதமர்களின் கரத்தை வலுப்படுத்தியிருக்கிறோம். இந்த அனைத்துக் கட்சிகள் கூட்டத்தைக் கூட்டியிருக்கும் பிரதமர் நரேந்திர மோடியை ஆதரிப்பதில் எங்களுக்கு எவ்விதத் தயக்கமும் இல்லை. இந்தியா என்னும் எண்ணத்தைப் பாதுகாத்திட உழைத்திடும் இயக்கத்தை வழிநடத்துகிறேன் என்பதில் நான் பெருமை கொள்கிறேன்" என்றார்.
மேலும் " 1962 போரின் போது முதல் களப்பலியானவர் தமிழகத்தில் உள்ள தூத்துக்குடியைச் சேர்ந்த வீரர் செல்வராஜ் என்பதை நினைவு கூர்கிறேன். இன்றைக்கு 58 ஆண்டுகள் கடந்த பின்னரும் - இராணுவ வீரர் பழனி அவர்களைத் தமிழகம் தியாகம் செய்திருக்கிறது. ஆகவே இத்தருணத்தில் இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் பாதுகாக்க, மாண்புமிகு பிரதமர் அவர்கள் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியுடன் துணை நிற்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். போர்க்குரல் ஒலிக்கும் போது நாம் பின்வாங்க மாட்டோம். ஒரே நாடாக நாம் முன்சென்று, இந்திய நாட்டின் பெருமையை நிலைநாட்டிடுவோம்" எனக் கூறினார்.