முதல்வர் ஸ்டாலின் Pt web
தமிழ்நாடு

கோவை | செந்தில் பாலாஜி தலைமையில் திமுக பாக முகவர்கள் மாநாடு.. ஸ்டாலின் பங்கேற்பு!

கோவையில் திமுக மேற்கு மண்டல பாக முகவர்கள் மாநாடு இன்று நடக்கிறது. இந்த மாநாட்டில் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

Premkumar S

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களில் உள்ள நிலையில், ஸ்டாலின் தலைமையிலான ஆளும் திமுக மீண்டும் ஆட்சியை தக்கவைக்கும் நோக்கில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் தான், கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்தான பேச்சுவார்த்தை ஒருபக்கம் நடைபெற்று வரும் நிலையில், மறுபக்கம் மண்டல வாரியாக திமுக வாக்குச்சாவடி முகவர்களுக்கான மாநாடுகளை நடத்தி வருகிறது. அதில், நேரடியாக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு வாக்குச்சாவடி முதல்வர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார். இந்த சூழலில் தான், கடைசியாக மதுரையில் தென் மண்டல பாக முகவா்கள் மாநாடு அண்மையில் நடந்து முடிந்தது.

திமுக மாநாடு

அதைத் தொடர்ந்து இன்று, கோவை மாவட்டம் நீலாம்பூர் அருகே உள்ள திறந்தவெளி மைதானத்தில் திமுகவின் மேற்கு மண்டல பாக முகவர்கள் மாநாடு நடக்கவுள்ளது. இதில், 6 மாவட்டங்களைச் சேர்ந்த 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இந்த மாநாட்டிற்கு, திமுக மேற்கு மண்டல பொறுப்பாளர் செந்தில் பாலாஜி தலைமை தாங்க உள்ளார். இந்த மாநாட்டிற்காக, இன்று காலை 11 மணியளவில் கோவை செல்லும் முதல்வர் ஸ்டாலின், முதற்கட்டமாக அங்கு பல்வேறு அரசு நிகழ்வுகளில் பங்கேற்கிறார். அதைத் தொடர்ந்து, மாலை 4 மணிக்கு மேற்கு மண்டல பாக முகவர்கல் மாநாட்டில் கலந்து கொண்டு பேசவுள்ளார்.

மாநாட்டிற்கான மேடை அமைக்கும் இறுதி கட்டப் பணிகள் நடந்து வரும் நிலையில், மாநாட்டிற்கு வருவோருக்கான குடிநீர், கழிவறை, இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து, 1,300-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.