தமிழ்நாடு

ஸ்டாலினை சீண்ட வேண்டாம்: டி.டி.வி. தினகரனுக்கு டி.ஆர்.பி. ராஜா எச்சரிக்கை

ஸ்டாலினை சீண்ட வேண்டாம்: டி.டி.வி. தினகரனுக்கு டி.ஆர்.பி. ராஜா எச்சரிக்கை

Rasus

ஸ்டாலினை வீணாக சீண்ட வேண்டாம் என டிடிவி தினகரனை டி.ஆர்.பி. ராஜா எச்சரித்துள்ளார்.

திமுக அரசை, ‘குற்றவாளிகளால் நடத்தப்படும் அரசு’ என்று ஸ்டாலின் விமர்சித்து வருவதைக் கண்டித்து அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், தங்கத்தை தரம் பார்த்துச் சொல்கிற உரிமை உரைகல்லுக்குத் தான் உண்டே தவிர, துருப்பிடித்த தகரங்களுக்கு இல்லை என குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் அதற்கு பதில் அளிக்கும் வகையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியல் நேர்மைக்கு இலக்கணமாகத் திகழும் ஸ்டாலினைப் பார்த்து, தினகரன் விமர்சிப்பது விரக்தியின் விளிம்பில் நிற்பவரின் புலம்பல் போல் இருக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார். தங்கத்தைப் பார்த்து, பித்தளை இளிப்பதை தரணி தாங்காது எனவும் கூறியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமியும், செங்கோட்டையனும் கட்சியைக் கைப்பற்றுவார்களோ என்ற பீதியிலும், போயஸ் தோட்டத்தில் இருந்து வெளியேற வேண்டிய நிலை வரப்போகிறது என்ற ஆத்திரத்திலும், ஆதங்கத்திலும் ஸ்டாலினை விமர்சித்து, தன்னை முன்னிலைப் படுத்திக்கொள்ள தினகரன் முயல்கிறார் என டி.ஆர்.பி. ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

அண்ணா கற்றுக்கொடுத்த கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, கருணாநிதியிடம் பயின்ற அரசியல் பண்பாடு போன்றவற்றை மனதில் வைத்து, ஸ்டாலின் அமைதியாக இருக்கிறார் என்று கூறியுள்ள டி.ஆர்.பி.ராஜா, ஸ்டாலினை வீணாக சீண்ட வேண்டாம் என தினகரனை எச்சரித்துள்ளார்.