தமிழ்நாடு

மக்களை விலைக்கு வாங்க திமுகவின் 'ப்ளூ ஸ்கை ஆப்ரேஷன் ' - அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு

மக்களை விலைக்கு வாங்க திமுகவின் 'ப்ளூ ஸ்கை ஆப்ரேஷன் ' - அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு

webteam

'ப்ளூ ஸ்கை ஆப்ரேஷன் ' என்ற பெயரில்  இரண்டாயிரம் கோடி செலவு செய்து  மக்களை விலைக்கு வாங்க திமுக திட்டமிட்டுள்ளதாக அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்

வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகரில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டுக்கு நேற்று நள்ளிரவு 3 மணியளவில் இருந்து வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது. துரைமுருகனின் வீடு மற்றும் காரில் நடைபெற்ற இச்சோதனை சுமார் 7 மணி நேரம் நீடித்தது. இதேபோல், வாணியம்பாடியில் உள்ள திமுக முன்னாள் மாவட்டச் செயலாளர் தேவராஜின் வீட்டிலும் இரண்டு மணி நேரம் சோதனை நடைபெற்றது.

இதனிடையே, காட்பாடி கிருஸ்தியான்பேட்டையில் உள்ள துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்துக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி மற்றும் வேலூர் அருகேயுள்ள துரைமுருகனின் பண்ணை வீட்டிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். கல்லூரி, விடுதி என அனைத்து இடங்களிலும் 40 அதிகாரிகள் சோதனையிட்டனர். சுமார் 13 மணி நேரம் அலசி ஆராய்ந்த அதிகாரிகள், அனைத்தும் சரியாக உள்ளது என எழுதி கொடுத்துவிட்டு சென்றதாக துரைமுருகன் தெரிவித்தார்.

இந்நிலையில் வருமானவரித்துறை சோதனை குறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், 'ப்ளூ ஸ்கை ஆப்பரேஷன் ' என்ற பெயரில் தொகுதி ஒன்றிற்கு நூறு கோடி‌ வீதம் 20 தொகுதிகளுக்கு இரண்டாயிரம் கோடி செலவு செய்து மக்களை விலைக்கு வாங்க திமுக திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் இந்த திட்டம் குறித்து வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்ததன் அடிப்படையிலேயே துரைமுருகன் வீட்டில் சோதனை நடைபெற்றிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக சோதனை குறித்து பேசிய முதலமைச்சர் பழனிசாமி, துரைமுருகன் வீட்டில் நடைபெற்ற வருமானவரித்துறை சோதனை குறித்து தமக்கு ஏதும் தெரியாது என்றும், அது தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை என்றும் தெரிவித்தார்.