‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற நூல், நேற்று சென்னையில் த.வெ.க. தலைவர் விஜய் வெளியிட்டார்.. அப்போது பேசிய விஜய், திமுக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். இது தற்போது திமுக அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் என அரசியல் களத்திலேயே பேசுபொருளாக மாறியுள்ளது.
இதற்கு, திமுக மாணவரணி மாநில செயலாளர் எழிலரசன் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அதில், ”ஒரு புதிய கட்சியை தொடங்குகிறவர்கள்.. மக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்த என்ன செய்யவேண்டுமோ அதில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, திமுகவை விமர்சிப்பதில் மட்டுமே ஒரு அரசியல் கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து பேசுவார்களாயின்... இதை மக்கள் ஏற்றுக்கொள்வாரார்களா? என்று அவர்களின் பார்வைக்கே விட்டுவிடுகிறேன்..
சினிமாவில் பெரிய ஹீரோவாக நடித்துவிட்டால் நாட்டில் அனைத்தையும் செய்துவிடார்கள் என்று மக்கள் கருதிவிட மாட்டார்கள். மக்களுக்கான பிரச்னைக்கு யார் உடன் நிற்கிறார்கள், மக்களுக்காக யார் போராடுகிறார்கள்,யார் நல்லதை செய்கிறார்கள். இதைதான் மக்கள் பார்க்கிறார்கள். அப்படிப்பட்ட மாநிலமாகத்தான் தமிழ்நாடு இருக்கிறது.
இப்படி பேசுகிறவர்களுக்கெல்லாம் மக்கள் எல்லாவற்றையும் வாரி கொடுத்துவிடுவார்கள் என்று கிடையாது. கூட்டணி நேர்த்தியாக,உறுதியாக, கொள்கையாக... நம்முடைய தலைவர் அவர்கள் உருவாக்கிய நாளிலிருந்து கூடிக்கொண்டுதான் இருக்கிறது.
2018ல் உருவான கூட்டணி தொடர்ந்து 6 ஆண்டுகளாக இருக்கிறது. ஆறு ஆண்டு காலத்திலும் சந்தித்த எல்லா தேர்தலிலும் இந்த கூட்டணியே வென்றிருக்கிறது. ஊடகவியலாளர்கள் , அரசியல் நோக்கர்களுக்கு தெரியும்.. 2019 கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளை கடந்து கூடுதலாக 2021 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தது. அதே போல, 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் கூடுதல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளது.
இவை எல்லாம் இந்த ஆட்சி நல்லாட்சி என்பதைத்தான் காட்டுகிறது. மாநிலத்து உரிமையை பாதுகாக்கிற ஆட்சி. எனவே, இந்த கூட்டணி கூடுதலாக இன்னும் வலிமை பெற்றுக்கொண்டுதான் வருகிறது . இது வலிமைமிக்க கூட்டணி.. இதை உடைக்கவேண்டும் என்று கருதக் கூடியவர்கள்.. பொறாமையில் வயித்தெரிச்சலில் பேசுவதற்கு நாங்கள் பொறுப்பு இல்லை.
அரசியலே தெரியாத ஒருவராக இவர்கள் எல்லாம் இருக்கிறார்கள் என்று இப்பொழுது தெரிகிறது.
மக்களை சந்தித்து, மக்களிடம் வாக்கை பெற்று சட்டமன்ற உறுப்பினராக ஒருவர் ஆனபிறகுதான் இதை பேசவேண்டும். ஆகாதவர்கள் எல்லாம் இதை பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
சமீபத்தில் பெரிய மழை வெள்ளம் வந்தது. நலத்திட்டத்தையே work from home ல் கொடுத்திருக்கிறார். இது எந்த ஊரிலாவது நடக்குமா? வெள்ளம் வந்த களத்திற்கே போகாதவர்கள் பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது ” என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து இது குறித்துபேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், " எங்களை பொறுத்தவரையில் மக்களுக்கு உண்மையாக உழைக்கக்கூடியவர்களாக நாங்கள் இருக்கிறோம். தமிழ்நாட்டின் முதலமைச்சரும் இதைதான் எடுத்துரைக்கிறார். மக்களுக்கு பயன்படும்வகையில், நல்ல ஆட்சியை நடத்திக்கொண்டு வருகிறார். கருத்துக்கள் என்று கூறும் பட்சத்தில் அந்த இயக்கத்தை சார்ந்த தலைவரும் எங்கள் இயக்கத்தை சார்ந்த தலைவரும் உட்கார்ந்து பேசிக்கொள்வார்கள். ஒரு அண்ணன் தம்பிப்போல, ஒரு கொள்கைக்கான கூட்டணியாகத்தான் இந்த கூட்டணி ஆரம்பத்திலேயே இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.
அதனால்தான், இந்த கூட்டணி வலுவாக இருக்கிறது. கூட்டணியில் பிரிவு வந்துவிடாதா? என்று நிறைப்பேர் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.அதற்கு நாங்கள் இடம் கொடுக்கமாட்டோம்.. திருமாவளவனை பொறுத்தவரை மிகப்பெரிய தலைவர் சுயமரியாதைக்கொண்டவர் அவர்.. அவ்வளவு எளிதாக அழுத்தம் கொடுத்து ஒரு செயலை செய்துவிடும்படி கூறிவிட முடியாது. அவரை மதிக்கக்கூடியவராகதான் நாங்கள் இருக்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.