ராஜ்யசபா இடங்கள் முகநூல்
தமிழ்நாடு

வைகோவுக்கு கல்தா கமலுக்கு வாய்ப்பு.. 4 ராஜ்யசபா இடங்கள் திமுகவின் வியூகம் என்ன?

திமுகவின் புதிய வேட்பாளர்கள் யார், அவர்கள் தேர்வுக்குப் பின்னால் உள்ள வியூகம் என்ன விரிவாகப் பார்ப்போம்..

இரா.செந்தில் கரிகாலன்

தமிழ்நாட்டில் ஜூலை மாதம் காலியாகும் ராஜ்யசபா இடங்களுக்கான வேட்பாளர்களை அறிவித்திருக்கிறது திமுக தலைமை.., அதோடு தங்களின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மக்கள் நீதி மய்யத்துக்கும் ஒரு இடத்தை ஒதுக்கியுள்ளது. திமுக சார்பில் ஏற்கெனவே எம்.பியாக இருந்த எம்.எம்.அப்துல்லா, தொமுச தலைவர் சண்முகத்துக்கு இந்தமுறை வாய்ப்பு வழங்கப்படவில்லை... அதேபோல, மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கும் வாய்ப்பளிக்கப்படவில்லை..,திமுகவின் புதிய வேட்பாளர்கள் யார், அவர்கள் தேர்வுக்குப் பின்னாள் உள்ள வியூகம் என்ன விரிவாகப் பார்ப்போம்.

மாநிலங்களவை

தமிழகத்திலிருந்து ராஜ்யசபா எம்பிக்களாக பதவி வகித்துவரும், திமுகவைச் சேர்ந்த எம்.எம்.அப்துல்லா, வழக்கறிஞர் வில்சன், திமுக தொழிற்சங்கமான தொமுச தலைவர் சண்முகம், பாமக தலைவர் அன்புமணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அதிமுகவைச் சேர்ந்த சந்திரசேகரன் ஆகிய ஆறு பேரின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ல் காலியாகிறது. அதற்கான தேர்தல் ஜூன் 19-ல் தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

எம்.எல்.ஏ எண்ணிக்கையின் அடிப்படையில் இந்த ஆறு இடங்களில் நான்கு இடங்கள் திமுகவுக்கும், இரண்டு இடங்கள் அதிமுகவுக்கும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அந்தவகையில், நான்கு இடங்களுக்கான வேட்பாளர்களை திமுக தலைமை அறிவித்துள்ளது. ஏற்கெனவே எம்பியாக இருக்கும் வில்சனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேவேளை, எம்.எம்,அப்துல்லா, சண்முகத்துக்குப் பதிலாக கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகிய இருவருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது

கமல்ஹாசன்

அதேபோல, வைகோவுக்குப் பதிலாக, மநீமவுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலின்போதே, ராஜ்யசபா இடத்துக்கான ஒப்பந்தம் போடப்பட்டது. அதனடிப்படையில் இடம் ஒதுக்கப்பட்டு கமல் போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வில்சன்

திமுகவின் சட்ட ரீதியான செயல்பாடுகளில் முன்னணியில் இருப்பவர் வில்சன். கிறிஸ்துவர் பிரதிநிதித்துவம் என்கிற அடிப்படையிலும் அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

கவிஞர் சல்மா

அவரோடு, தற்போது புதிதாக கவிஞர் சல்மா,எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகிய இருவருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. கவிஞர் சல்மா மிக நீண்ட காலமாக திமுகவில் பயணித்து வருபவர், மகளிர் அணியில் முக்கியப் பொறுப்புகளில் இருந்தவர் . தற்போது செய்தி தொடர்புக் குழு இணைச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார்.

பேருராட்சி தலைவராக இருந்தவர். 2006-ல் சட்டமன்ற தேர்தலில் மருங்காபுரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தவர். தொடர்ந்து எம்.எல்.ஏம், எம்.பி தேர்தல்களில் வாய்ப்புகள் கிட்டாத சூழலில் தற்போது ராஜ்யசபா இடம் கிடைத்துள்ளது. பொதுவாக அறிவுசார் வட்டங்களில் உள்ளவர்களுக்கு ராஜ்யசபா இடங்கள் அளிப்பதை திமுக கடைபிடித்து வருவதோடு, பெண், இஸ்லாமியர் பிரதிநிதித்துவம் என்கிற அடிப்படையிலும் இந்த வாய்ப்பு அளிக்கட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

எஸ்.ஆர்.சிவலிங்கம்

எஸ்.ஆர்.சிவலிங்கம்

அதேபோல,எஸ்.ஆர்.சிவலிங்கம் திமுகவின் நீண்டகாலமாக இயங்கி வருபவர், தற்போது. திமுகவின் சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளராக உள்ளார். 1989 மற்றும் 1996 ஆண்டுகளில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றிருக்கிறார். நீண்டகாலம் கட்சிக்காக களப்பணியாற்றியவர் என்ற அடிப்படையில் அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணி என்று பார்த்தால், கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது மதிமுகவுக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டது. அதோடு, மதிமுகவுக்கு என ஒதுக்காமல், வைகோ மாநிலங்களவைக்குச் செல்வதாக இருந்தால் ஒரு ராஜ்யசபா இடம் என பேசப்பட்டது. அதனடிப்படையில் வைகோ எம்.பியானார். ஆனால், தற்போது அவரின் வயது, உடல்நிலையைக் கருத்தில்கொண்டும் மநீமவுக்கு ஒரு இடம் ஒதுக்க வேண்டி இருப்பதாலும் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு மநீமவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே, திமுக கூட்டணிக்கு தீவிரமாக பிரசாரம் செய்தார் கமல்ஹாசன். தற்போது விஜய்யும் களத்தில் இருப்பதால், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் பிரசார முகங்களில் ஒருவராக கமல்ஹாசன் இருப்பார் எனக் கணக்கிட்டே இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. தவிர, மநீமவுக்கு பெருநகரங்களில் இருக்கும் கணிசமான வாக்குவங்கியும் திமுகவுக்கு மேலும் வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.