நான்கரை ஆண்டுகளில், முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு நிறுவியிருக்கும் சிலைகளும், மணிமண்டபங்களும் ஏதோ ஒரு கணக்கில் அடங்கும் பொதுப்பணித்துறைப் பட்டியல்கள் அல்ல. அவை ஒவ்வொன்றும் ஒரு தெளிவான அரசியல் நகர்வு என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். திராவிட இயக்கத்தின் நீண்டகால மரபைத் தாண்டி, பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த முன்னோடி தலைவர்களுக்கு சிலைகள் அமைப்பதன் மூலம் ஒரு புதிய சித்தாந்த ஒருங்கிணைப்பை திமுக அரசு முன்னெடுத்து வருகிறது என்கின்றனர்.
சென்னையில் அயோத்திதாசப் பண்டிதருக்கு மணிமண்டபமும், இடதுசாரித் தலைவர் கார்ல் மார்க்ஸ் மற்றும் சமூக நீதிக்காகப் போராடிய வி. பி. சிங் ஆகியோருக்கு முழு உருவச் சிலைகளும் நிறுவப்பட்டுள்ளன. கருப்பு, சிவப்பு, நீலம் என மூன்று சித்தாந்த நிறங்களையும் ஒரே புள்ளியில் இணைப்பதன் மூலம், வலதுசாரி அரசியலுக்கு எதிராக ஒரு வலுவான சித்தாந்த அரணை தமிழக அரசு உருவாக்குவதாக கூறுகின்றனர். விழுப்புரத்தில் இட ஒதுக்கீடு போராட்ட தியாகிகள் 21 பேருக்கு நினைவுத் தூண் மற்றும் அரங்கம், திருச்சியில் பெரும்பிடுகு முத்தரையருக்குச் சிலையுடன் கூடிய மணிமண்டபம். தஞ்சாவூரில் நீதிக்கட்சித் தலைவர் சர் ஏ.டி. பன்னீர்செல்வத்திற்கு மணிமண்டபம். திருச்சியில் இசைக்கலைஞர் தியாகராஜ பாகவதருக்கு மணிமண்டபம். கோவில்பட்டியில் எழுத்தாளர் கி. ராஜநாராயணனுக்கு நினைவரங்கம் என பல்வேறு சமூகங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
விடுதலைப் போராட்ட வீராங்கனைகள் ராணி வேலுநாச்சியார் மற்றும் அஞ்சலை அம்மாளுக்குச் சிலைகள். தூத்துக்குடியில் ராவ் பகதூர் குரூஸ் பெர்னாந்திஸிற்குச் சிலை. ஈரோட்டில் மாவீரன் பொல்லானுக்கும், மதுரையில் டி.எம். சௌந்திரராஜனுக்கும் வெண்கலச் சிலைகள். இவற்றுடன் முக்குலத்தோர் தலைவர்களான முத்துராமலிங்க தேவர், மூக்கையா தேவர் மற்றும் மருது சகோதரர்களின் நினைவகங்கள் அரசு விழாவாகக் கொண்டாடப்படுகின்றன.
இதன் மூலம் வன்னியர், முக்குலத்தோர், பட்டியலின மக்கள், சௌராஷ்ட்ரா, பரதவர் என அனைத்துச் சமூகங்களின் ஆதரவைப் பெற திமுக அரசு முயல்வதாக கூறுகின்றனர். பாரதியார், வ.உ.சி போன்ற தேசியத் தலைவர்களை முன்னிறுத்துவதன் மூலம், திமுக தேசியத்திற்கு எதிரானது என்ற விமர்சனத்தையும் முதல்வர் ஸ்டாலின் மௌனமாக்க முயல்கிறார் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள் . சித்தாந்தம் மற்றும் வாக்கு வங்கி அரசியலை இணைக்கும் திமுக அரசின் நகர்வுகள் தேர்தல் அரசியலில் முக்கியத்துவம் பெறும் என்றே பார்க்கப்படுகிறது.