பொன்முடி - திமுக சரவணன்
பொன்முடி - திமுக சரவணன் pt web
தமிழ்நாடு

பொன்முடிக்கு சிறைத்தண்டனை: “தீர்ப்பில் மிக முக்கிய குறைபாடு உள்ளது” திமுக வழக்கறிஞர் சரவணன்

Angeshwar G

அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், அவர் குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம், தண்டனை குறித்த விவரங்களை இன்று அறிவிக்கும் என தெரிவித்திருந்தது. அதன்படி அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அபராதமாக தலா ரூ.50 லட்சம் விதிக்கப்பட்டுள்ளது.

பொன்முடி

அமைச்சர் பொன்முடி மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்புகளுக்காக ஒரு மாதத்திற்கு அவருக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பொன்முடி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, “வயதையும், மருத்துவக் காரணங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்” என கோரிக்கை வைத்திருந்தார். என்றபோதிலும் கூட பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இதனால் பொன்முடியின் எம்.எல்.ஏ பதவி பறிக்கப்பட்டது. அவர் வகித்த வந்த அமைச்சர் பதவியும், அமைச்சர் ராஜக்கண்ணப்பனுக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து புதிய தலைமுறையிடம் திமுக வழக்கறிஞர் சரவணன் தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார். அவர் பேசுகையில், “ஜெயலலிதாவின் வழக்கையும் இதனையும் ஒப்பிட முடியாது, அது 66 கோடி. 66 கோடிக்கே 4 வருடம்தான் சிறைத்தண்டனை கொடுத்தனர். இந்த வழக்கில் ரூ.1.7 கோடி என சொல்கிறார்கள். அதற்கு 3 வருடம் சிறைத்தண்டனை கொடுத்துள்ளனர். அதிலும் 25 வருடங்கள் கழித்து தண்டனை கொடுத்துள்ளனர். கீழமை நீதிமன்றம் இதேவழக்கில் பொன்முடியை விடுதலை செய்திருந்தது.

Ponmudi | DMK

இந்த வழக்கின் தீர்ப்பில் மிக முக்கியமான குறைபாடு உள்ளது. அதன்படி சொத்துக்குவிப்பு வழக்கில் மிக முக்கியமாக பார்ப்பது, சொத்துக்கள் குறித்த விவரங்களை சரியான நேரத்தில் வருமான வரித்துறையிடம் சொல்லியுள்ளீர்களா என்பதைதான்.

இந்த வழக்கை பொறுத்தவரை பொன்முடி சரியான நேரத்தில் வருமானம் எங்கிருந்து வந்தது என்பதை வெளிப்படுத்தியுள்ளர். இதனை வைத்துதான் கீழமை நீதிமன்றம் விடுதலை செய்திருந்தது.

உயர்நீதிமன்ற நீதிபதி மன்றமோ, ‘நீங்கள் வருமான வரித்துறையினரிடம் கூறியுள்ளீர்கள்; ஆனால் அதற்கான சாட்சியங்கள் ஏதும் இல்லையே, அதை எப்படி நம்புவது’ என கேட்கிறது. இது உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரானது. இந்த தீர்ப்பு கண்டிப்பாக உச்சநீதிமன்றத்தில் மாற்றியமைக்கப்படும். இது பொன்முடிக்கு மிகப்பெரிய பின்னடைவு. திமுகவிற்கு இது எப்படி பின்னடைவாகும்? அப்படி பார்த்தால் பாஜக-வுக்கு எவ்வளவோ நடந்துள்ளன. அதெல்லாம் அக்கட்சிக்கா பின்னடைவு? அப்படி நாங்கள் சொன்னால்தான் அவர்கள் ஏற்பார்களா?” என தெரிவித்துள்ளார்.